கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 5ஜி இணைய சேவை வசதியுடன், ரூ.75,999 என்ற துவக்க விலையில் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளன. கூகுள் நிறுவனத்தின் புதிய சிப்செட், மேம்படுத்தப்பட்ட கேமரா வசதிகளுடன் இந்த பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
கூகுள் பிக்சல் 8: விலை, சிறப்பம்சங்கள் என்ன?
6.2-இன்ச் அளவில் 120Hz OLED திரையுடன் அறிமுகமாகியுள்ள கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன், 2,000 நிட்ஸ் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு ஆகிய சிறப்பான டிஸ்பிளே வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கூகுளின் அடுத்த தலைமுறை டென்சர் G3 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் 2ம் கேமரா என 2 பின்புற கேமராக்களுடன் அறிமுகமாகியுள்ளது. இவற்றில், இந்த 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா 8x டிஜிட்டல் ஜூம் திறனை கொண்டுள்ளது. மேலும் 12 மெகாபிக்சல் கேமரா மேக்ரோ வசதியை கொண்டுள்ளது. இவை மட்டுமின்றி, செல்ஃபிகளுக்காக இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 10.5 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
4,575mAh பேட்டரியுடன், 27W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் மற்றும் 18W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளையும் இந்த பிக்சல் 8 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
ஹசெல், ஒப்சிடியன் மற்றும் ரோஸ் என மூன்று வண்ணங்களில், 128 ஜிபி சேமிப்பு வசதியுடன், ரூ.75,999 என்ற விலையில், இந்த கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது.
கூகுள் பிக்சல் 8 ப்ரோ: விலை, சிறப்பம்சங்கள் என்ன?
6.7-இன்ச் அளவில் QHD+ 120Hz LTPO OLED திரையுடன் அறிமுகமாகியுள்ள கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன், 2,400 நிட்ஸ் பிரைட்னஸ், ‘கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2’ பாதுகாப்பு ஆகிய சிறப்பான டிஸ்பிளே வசதிகளைக் கொண்டுள்ளது. கூகுள் பிக்சல் 8 போனை போல, இந்த ஸ்மார்ட்போனிலும் டென்சர் G3 சிப்செட்டே பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் மற்றும் 48 மெகாபிக்சல் 5x டெலி லென்ஸ் கேமரா என 3 பின்புற கேமராக்களுடன் கூகுள் பிக்சல் 8 ப்ரோ அறிமுகமாகியுள்ளது. இந்த கேமராக்கள் 30x டிஜிட்டல் ஜூம் திறனைக் கொண்டுள்ளது. கூகுள் பிக்சல் 8-ஐ போல, செல்ஃபிகளுக்காக இந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோவும் முன்புறத்தில் 10.5 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.
5,050mAh பேட்டரியுடன், 30W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் மற்றும் 23W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளையும் இந்த பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
பே புளூ, ஒப்சிடியன் மற்றும் போர்சிலியன் என மூன்று வண்ணங்களில், 128 ஜிபி சேமிப்பு வசதியுடன், இந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,06,999 என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.
விற்பனை எப்போது?
பிளிப்கார்ட் தளத்தில், இந்த 2 ஸ்மார்ட்போன்களும் அக்டோபர் 12 அன்று விற்பனைக்கு வரும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இவற்றுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
மேலும், ஐசிஐசிஐ, கோடக் மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்தி, கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனுக்கு ரூ.8,000 தள்ளுபடியும், கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.9,000 தள்ளுபடியும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்தியாவில் இந்த 2 ஸ்மார்ட்போன்களை பெறும் பயனர்கள், ரூ.39,900 மதிப்புள்ள பிக்சல் வாட்ச் 2 ஸ்மார்ட்வாட்ச்சை, ரூ.19,999-ல் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
