ஆடிப் பெருக்கு திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்கம், வெள்ளி விலையானது இன்று (ஆகஸ்ட் 2) உச்சத்தை தொட்டுள்ளது.
தமிழகத்தில் பழங்காலமாக ஆடி 18 எனும் ஆடி பெருக்கு திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப இந்த மாதத்தில் விதைத்தால் செழித்து வளரும் என்பதைப் போல, இந்த ஆடி 18ல் வாங்கும் எந்த ஒரு பொருளும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. அதனால் நம்மில் பெரும்பாலானோர் குண்டுமணி தங்கமாவது வாங்கி மகிழ்வர்.
இந்த நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.140 உயர்ந்து ரூ.9,290-க்கும், ஒரு சவரன் ரூ.1,120 உயர்ந்து ரூ.74,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.153 உயர்ந்து ரூ.10,134-க்கும், ஒரு சவரன் ரூ.1,224 உயர்ந்து ரூ.81,072-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.123-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,23,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
