நகை கடன் விதிகள் : நிர்மலா சீதாராமனின் பரிந்துரை – வரவேற்பும் கோரிக்கையும்!

Published On:

| By Kavi

நகைக்கடன் விதிகளை தளர்த்த மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்திருக்கும் நிலையில், இதற்கு ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தமிழக தலைவர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். gold loan rules stalin eps request

இந்திய ரிசர்வ் வங்கி நகை கடன்களுக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வந்தது. இதற்கு நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதை திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில் சில பரிந்துரைகளையும் வழங்கியிருந்தார். கடன் வழங்குபவர்கள் மற்றும் கடன் வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் சவால்களாக, சிறிய அளவிலான விவசாயக் கடன்களுக்கு கடன் பெறும் திறனை ஆவணமாக மதிப்பீடு செய்யும் முறையானது கிராமப்புறச் சூழலில் செயல்படுத்த முடியாததாக இருக்க வாய்ப்புள்ளது. இது கடன் வழங்கும் நடைமுறையில் தடைகளை உருவாக்கலாம் என்று தெரிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆர்.பி.ஐக்கு சில பரிந்துரைகளை வழங்கியிருக்கிறார். அதாவது, 2 லட்சம் ரூபாய் வரையிலான நகை கடன்களுக்கு இந்த விதிகளில் இருந்து தளர்வு அளிக்கலாம். 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த தளர்வுகளை செயல்படுத்தலாம் என்று பரிந்துரைத்திருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது.

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், “ நிதியமைச்சருக்கு நான் எழுதிய கடிதம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது. சிறு கடன் வாங்குபவர்களின் நலன்களைப் பாதுகாத்தல், குறிப்பாக விவசாயிகள் மற்றும் தினசரி வருமானம் ஈட்டுபவர்கள் ரூ. 2 லட்சத்திற்கும் குறைவான கடன்களை வாங்குபவர்களின் நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் சரியான நேரத்தில் கடன் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகியவை எனது நிலையான கோரிக்கையாக இருந்து வருகின்றன. ஏழை மக்கள் பாதிக்கும் வகையிலான இதுபோன்ற எந்த கொள்கையாக இருந்தாலும் அதுகுறித்து மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “புதிய ஒழுங்குமுறை விதிமுறைகளிலிருந்து ரூ,2 லட்சத்திற்கு கீழ் கடன் பெறும் சிறு தொகை கடன் பெறுநர்களை விலக்க நிதியமைச்சகம் பரிந்துரை செய்திருக்கிறது. இருப்பினும் விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்கள், தங்களின் அவசரத் தேவைகள், மருத்துவ மற்றும் கல்வி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்றாக தங்க நகைக் கடன்கள் இருப்பதால், அனைத்து தங்க நகைக் கடன்களுக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் வழியாக தங்க நகைக் கடன்கள் இருப்பதால், மத்திய நிதி சேவைகள் துறை வழங்கியுள்ள இந்த முக்கிய பரிந்துரைகளுக்கு ரிசர்வ் வங்கி பரிசீலிப்பதுடன், தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டுமென” வலியுறுத்தியுள்ளார். gold loan rules stalin eps request

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share