நகை கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதித்த புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. gold loan Finance Ministry recommendation
நகை கடன்கள் பெற இந்திய ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வந்தது.
அதன்படி சந்தை மதிப்பீட்டில் நகையின் மதிப்பை பொறுத்து 75% கடன் வழங்கப்படும், அந்த நகை தன்னுடையது தான் என்று நகை அடகு வைப்பவர்கள் சான்றளிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதற்கு நாடு முழுவதும் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த புதிய விதிமுறைகளை திரும்ப பெற வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சகம் நகை கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு இன்று (மே 30) சில பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அதில், “சிறிய தங்க நகைகள் கடன் பெறுபவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
இதுபோன்ற வழிகாட்டுதல்களை கள அளவில் செயல்படுத்த நேரம் தேவைப்படும். எனவே ஜனவரி 1 2026 முதல் இந்த கட்டுப்பாடுகளை செயல்படுத்தலாம்.
அதுபோன்று ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக கடன் வாங்குபவர்களுக்கு கடன்களை சரியான நேரத்தில் மற்றும் விரைவாக வழங்குவதை உறுதி செய்வதற்காக, இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்களிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து பெறப்பட்ட கருத்துக்களை ரிசர்வ் வங்கி மதிப்பாய்வு செய்து வருகிறது. gold loan Finance Ministry recommendation