மணிப்பூரில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நீடித்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 13) அம்மாநிலத்துக்கு சென்றார்.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைத்தேயி இனக்குழுக்களிடையே 2023-ம் ஆண்டு முதல் மோதல் நிகழ்ந்து வருகிறது. இம்மோதல்களில் 500 பேர் கொல்லப்பட்டனர். பல லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 ஆண்டுகளாக மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்; வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களையும் சந்திக்கவில்லை. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன; நாடாளுமன்றத்தையும் முடக்கின.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூர் மாநிலத்தின் சூரத்சந்த்பூர் சென்றடைந்தார். முன்னதாக பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக சூரத்சந்த்பூரில் நேற்று முன் தினம் பெரும் வன்முறை வெடித்திருந்தது.
மேலும் பிரதமர் மோடியின் தற்போதைய மணிப்பூர் பயணத்துக்கு உள்ளூர் அமைப்புகள் பலவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து “Go Back Modi” முழக்க போராட்டத்தையும் அறிவித்திருந்தன. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மோடியின் 2 ஆண்டுகள் தாமதமான மணிப்பூர் பயணத்தை கடுமையாக விமர்சித்துள்ளன.
பிரதமர் மோடி இன்று மிசோரம் பயணத்தை முடித்துக் கொண்டு மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றார். ஆனால் இம்பாலில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் விழா நடைபெறும் சூரத்சந்த்பூருக்கு மோடியால் ஹெலிகாப்டரில் செல்ல முடியவில்லை. இதனையடுத்து சாலை மார்க்கமாக 1.30 மணிநேரம் பயணித்து சூரத்சந்த்பூர் சென்றடைந்தார் பிரதமர் மோடி.
