“இல்லாத சார்களை உருவாக்கும் ஒரே சார் எடப்பாடி” : ரகுபதி கடும் தாக்கு!

Published On:

| By Kavi

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் குறைவில்லாத சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று (ஜூன் 2) தீர்ப்பு வழங்கியது. gnanasekaran convict verdict

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு. அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம். அதனால் தான் யார் அந்த சார்? என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம். எப்.ஐ.ஆர்-ல் குறிப்பிடப்பட்ட அந்த சார் யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு? அந்த சாரை காப்பாற்றியது யார்?

இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது.

ADVERTISEMENT

அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த சாரை எந்த சாராலும் காப்பாற்ற முடியாது!” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை தொடர்ந்து சட்டத் துறை அமைச்சர் ரகுபதி எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் திராவிட மாடல் அரசு எடுத்த உறுதியான நடவடிகைகளால் 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்படும் எனச் சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்தார், அதே போல 60 நாட்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எடுத்து வைத்த சாட்சியங்கள், வலுவான வாதங்களின் மூலம் விரைவாகத் தீர்ப்பு பெறப்பட்டு நீதி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை விரைவாகப் பெற்றுத்தருவதிலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசும் காட்டும் உறுதிப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாக அமைந்திருக்கிறது இந்தத் தீர்ப்பு.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக உண்மையான நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்த பழனிசாமியால்தான் அந்த வழக்கில் நீதிக் கிடைக்க 6 ஆண்டுகள் ஆனது. ஆனால் ஐந்தே மாதங்களில் பாதிக்கபட்ட பெண்ணுக்கு நீதிக் கிடைக்கச் செய்திருக்கிறார் தமிழக முதல்வர்.

அந்த வயிற்றெரிச்சலில் என்ன செய்வதென்று தெரியாமல் வழக்கம்போலத் தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார் பழனிசாமி.

இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி ஞானசேகரன்தான் என நீதிமன்றம் உறுதி செய்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டு மாணவிகளை அச்சுறுத்தி அவர்களைக் கல்வி நிலையங்களுக்குச் செல்ல விடாமல் அச்சுறுத்த வேண்டும் எனும் அற்பபுத்தியோடு ‘யார் அந்தச் சார்?’ என அருவருப்பு அரசியல் செய்த பழனிசாமியின் இழிவான அரசியல் அம்பலப்பட்டிருக்கிறது.

“அமைச்சர்களுடன் படம் எடுத்ததற்காக முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்பு எனக் குற்றம்சாட்ட முடியாது” என உயர் நீதிமன்றமே தலையில் கொட்டிய போதும் திருந்தாமல் பெண்களை அச்சுறுத்தி அவர்களது படிப்பை முடக்க வேண்டும் என்பதற்காக ‘யார் அந்தச் சார்?’ என புரளியை வைத்து மலின அரசியல் செய்து வந்தார் பழனிசாமி

உயர் நீதிமன்றத்தின் வழிக்காட்டுதலில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வு குழுவும் தனது அறிக்கையிலும் ஞானசேகரன் யாருடனும் பேசவில்லை அவனின் செல்போன் ‘ப்ளைட் மோடில்’ தான் இருந்ததும், அவன் யாருடனும் பேசவில்லை என்பதும் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தியது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி பெற்று தருவதை விட இந்த நிகழ்வை வைத்து திமுகவின் மீது எப்படியாவது களங்கம் சுமத்தலாம் எனக் கேவலமான அரசியல் செய்து வந்த பழனிசாமியின் புரளி நாடகம் தோற்றுப் போனபோதும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மீண்டும் அதே பொய்யை தூக்கி கொண்டு வந்திருக்கிறார் பழனிசாமி

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான். இது போன்று பொய் புரளிகளை வைத்து பித்தலாட்ட அரசியல் செய்வதையே முழுநேர தொழிலாகச் செய்து கொண்டிருக்கும் பழனிசாமி இன்று போல் உண்மைகளால் தொடர்ந்து அவமானப்படப் போவது உறுதி!

தமிழ்நாட்டு பெண்களின் உரிமைகளை உயர்த்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நுனியளவு சமரசத்திற்கு இடம்தராமல் ஆட்சி செய்யும் முதல்வரின் ஆட்சியில் பெண்களுக்குத் துன்பம் விளைவிக்கும் எந்தக் குற்றவாளியும் தப்ப முடியாது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வழக்கின் தீர்ப்பே சாட்சி” என்று குறிப்பிட்டுள்ளார். gnanasekaran convict verdict

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share