பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா மறைவு: தலைவர்கள் இரங்கல்!

Published On:

| By Selvam

மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் கைதாகி சமீபத்தில் விடுதலையான டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா நேற்று (அக்டோபர் 12) காலமானார்.

அவரது மறைவிற்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், ஐ.ஏ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின்

பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவின் மறைவு மனித உரிமைச் செயற்பாட்டுச் சமூகத்துக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும்.

தனது சுதந்திரமும் உடல்நிலையும் அச்சுறுத்தலில் இருந்தபோதும் கூட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அயராது போராடிய போராளி அவர்.

பல சவால்களை எதிர்கொண்ட நிலையிலும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர் காட்டிய நெஞ்சுரம் வாய்மைக்கான நிலைத்த அடையாளமாக என்றும் நினைவுகூரப்படும். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், அவரது அன்புக்குரியோர்க்கும் இந்தக் கடினமான வேளையில் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மோடி அரசின் அடக்குமுறையால் பலியாகியுள்ள ஜிஎன் சாய்பாபாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். பல ஆண்டுகளாக அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இத்தகைய கடுமையான குறைபாடுகள் உள்ள ஒருவருக்கு அவசரமாக தேவைப்படும் மருத்துவ சிகிச்சை அவருக்கு மறுக்கப்பட்டது. அவரது மரணத்திற்கு மோடி அரசே பொறுப்பு. இந்த இக்கட்டான நேரத்தில் அவரது மனைவி வசந்தா, மகள் மஞ்சீரா ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருமாவளவன்

ஜி.என்.சாய்பாபா மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற பொய்யான குற்றச்சாட்டின் பேரில் 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு கொடுமையான யு.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாற்றுத்திறனாளியான அவருக்கு அவர் பயன்படுத்தும் சக்கர நாற்காலியைக் கூட கொடுக்காமல் சிறையில் கொடுமைப் படுத்தினார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மும்பை உயர் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது.

உடனடியாக பாஜக அரசு அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்து உச்ச நீதிமன்றத்தில் பிணைக்குத் தடை ஆணையைப் பெற்றது. ஸ்டான் சாமி எப்படி சிறைக்குள்ளேயே உயிரிழந்தாரோ அப்படி இவரையும் உயிரிழக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக அரசு செயல்பட்டது.

ஆனால் கடந்த மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டுகள் யாவும் ஆதாரமற்றவை என்று கூறி அவரை விடுதலை செய்தது. 10 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த சாய்பாபா சிறை வாழ்க்கையின் போது அனுபவித்த சித்திரவதைகளின் காரணமாகப் பல்வேறு உடல்நலிவுகளுக்கு ஆளானார்.

அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் இப்போது உயிரிழந்திருக்கிறார்.

அவருடைய மரணத்தை இயற்கை மரணம் என்று நாம் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இது ஈவிரக்கமற்ற அடக்குமுறை ஆட்சியின் கோர விளைவாகும். அதற்குத் துணை போகும் நீதித்துறையின் இதயமற்ற அணுகு முறையின் சாட்சியும் ஆகும்.

சாய்பாபாவைச் சிறையில் அடைத்தது போல பொய்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்னும் பல சிந்தனையாளர்களை பாஜக அரசு யுஏபிஏ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளது.

உயர் நீதி அமைப்புகளும் அவர்களை விடுவிப்பது குறித்து அக்கறை காட்டாமல் இருக்கின்றன. பாஜக அரசின் அடக்குமுறைகளுக்கு கொஞ்சமும் பயப்படாமல் உறுதியோடு போராடிய சாய்பாபவுக்கு விசிக சார்பில் செம்மாந்த வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். யூ.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து சிந்தனையாளர்களையும் விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துகிறோம்.

அசாதுதீன் ஓவைசி

எந்த ஆதாரமும் இல்லாமல் உபா சட்டத்தின் கீழ் பேராசிரியர் சாய்பாபாவை சிறையில் அடைத்தனர். பேராசிரியர் சாய்பாபாவின் மரணம் ஆழ்ந்த கவலையை அளிக்கிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரிலாக்ஸ் விஜய் பதட்டத்தில் போலீஸ்… நேரடி ரிப்போர்ட்!

சாம்சங் பிரச்சினை: “போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” – சிஐடியு-க்கு தொமுச வேண்டுகோள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share