பாஸ்கர் செல்வராஜ்
எங்கே செல்கிறது உலகம்? அதில், இந்தியாவின் தெரிவென்ன? இதில், தமிழகத்தின் நிலை என்ன? இந்த மூன்று கேள்விகளுக்கு பதில் தேடி ஆராய்கிறது இந்தக் கட்டுரைத் தொடர்…
தொழில்நுட்பமே உலகின் திசையைத் தீர்மானிக்கும்!
உலகம் செல்லும் திசையைப் புதிய கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பங்களுமே தீர்மானித்திருக்கின்றன. உதாரணமாக 1990இல் இருந்து 2020 வரையிலான இந்த ஒரு தலைமுறை இடைவெளியில் வாழ்க்கை எப்படி தலைகீழ் மாற்றத்தைக் கண்டிருக்கிறது என்பதை அனைவரும் கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம்.
1990களுக்கு முன்புவரை மின்சாரத்தை எடுத்துச் செல்ல அமைக்கப்படும் கம்பிகளைப் போல தொலைபேசிக்கான கம்பிகள் அமைக்கப்பட்டு தொலைபேசி இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. மெல்ல இந்தக் கம்பிகள் காணாமல் போய், கம்பி இல்லாத மின்காந்த அலையின் (Electromagnetic Waves) துணையில் இயங்கும் அலைபேசி வந்தது. மனித மூளையில்லாமல் அதே போன்று (பகுதி அளவு) இயங்கும் கணினி வந்தது. உலகம் முழுதும் உள்ள இந்த சாதனங்களை இணைக்கும் வலைதளம் உருவானது. பின்னர் தொலைவிலிருந்து **பேசும்போதும், செய்திகளை அனுப்பும்போதும் அது மறுமுனையில் உள்ளவரை சென்றடைய ஆகும் தாமதத்தைச் சரிசெய்ய 2G, 3G வலைப்பின்னல் அமைப்புகள் வந்தன.
இன்று இதன் வேகம் மேலும் அதிகரித்து, 4G பயன்பாட்டுக்கு வந்ததன் காரணமாக நாம் பேசுபவரின் உருவத்தையும் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். அந்த அளவு இந்தக் கடத்திகள் வேகமாக சமிக்கைகளை (Signal) ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு வேகமாகக் கடத்தும் திறனை அடைந்திருக்கின்றன அல்லது உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்படி இன்டர்நெட்டின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பயன்பாடும் பரிமாணமும் மாற்றம் கண்டு வந்திருக்கிறது. எனில் இதற்கு அடுத்து என்ன?**
அமெரிக்க தொழில்நுட்பத்தை விஞ்சிய சீன தொழில்நுட்பம்!
அடுத்து என்ன 5G தான். இதில் என்ன பெரிய புதிர் இருக்கப் போகிறது? ஆனால், புதிர் அடுத்தது என்ன என்பதல்ல… அதை யார் கொண்டு வருகிறார்கள் என்பதுதான். இதுவரையிலான எல்லா முன்னணி கண்டுபிடிப்புகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சிகளிலும் அமெரிக்க நிறுவனங்களே தலைமை வகித்தன. இந்த தகவல் தொழில்நுட்பம் தொடர்பான கணினி, அலைபேசி அதை உருவாக்கப் பயன்படும் பாகங்கள் என எல்லா நவீன சாதனங்களையும் அமெரிக்க நிறுவனங்கள் சந்தைப்படுத்தி இன்று ட்ரில்லியன் டாலர் பெறுமதியான நிறுவனங்களாகத் திகழ்கின்றன. ஆனால் 5G தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை சீன நிறுவனமான ஹுவாவை அமெரிக்க நிறுவனங்களை முந்திக்கொண்டது.
இன்று அது அதிவேகமாக சமிக்கைகளை கடத்தும் பொருளை (Material) கண்டறிந்து அதை சந்தைப்படுத்த முயன்று வரும் நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் இன்றுவரை அப்படியான எந்த கண்டுபிடிப்பையும் நிகழ்த்தவில்லை. இந்த **சீன நிறுவனத்தின் கண்டுபிடிப்பு அரசுகளை கண்காணிக்கும் சாதனமாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பிருக்கிறது. அதனால் அமெரிக்கா மட்டுமல்ல; மற்ற நாடுகளும் இந்த ஹுவாவையின் 5G சாதனங்களை மற்ற நாடுகளும் பயன்படுத்தக் கூடாது என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது**. ஹுவாவை இதை மறுத்து இப்படி நடக்காது என உறுதிப்படுத்த தயாராக இருப்பதாகக் கூறுகிறது. எனினும் அமெரிக்கா ஏற்க மறுத்து மேலும் மேலும் அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. எனில் இது வெறும் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினையா?
வியாபாரம்-சந்தை சார்ந்த பிரச்சினை
சந்தையில் இருக்கும் ஒரு பொருளுக்கு மாற்றாக மற்றொரு பொருள் வரும்போது ஏற்கனவே இருக்கும் பொருளின் சந்தை மதிப்பு குறைந்து படிப்படியாக அதன் விற்பனை குறைந்து சந்தையில் இருந்து வெளியேறும். அலைபேசி பெருமளவு பயன்பாட்டுக்கு வந்தபின்பு தொலைபேசிகள் சந்தையில் இருந்து கிட்டத்தட்ட மறைய ஆரம்பித்து விட்டன. **இன்டர்நெட்டின் வேகம் 2G, 3G, 4G என அதிகரித்தபோது கையடக்க நோக்கியா அலைபேசிகள் பயன்பாட்டில் இருந்து மறைந்து ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட புதிய நிறுவனங்களின் திறன்பேசிகள் (Smart Phone) சந்தையைப் பிடித்தன.**
கணினிகள்கொண்டு செய்துகொண்டிருந்த பெரும்பாலான வேலைகளையும் இன்று திறன்பேசிகளைக்கொண்டே செய்து விட முடியும் அளவுக்கு அதன் செயல்பாடுகள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. இந்த மாற்றங்களை சாத்தியப்படுத்திய அமெரிக்க நிறுவனங்கள் உலகின் மொத்த சந்தையையும் தனதாக்கிக் கொண்டன. நோக்கியா போன்ற நிறுவனங்கள் சந்தையில் இருந்து வெளியேறின. அதன் பிறகான அனைத்து தொழில்நுட்ப முன்னேற்றங்களும் அமெரிக்க நிறுவனங்களே கொண்டு வந்தன. அப்படி என்றால் 5G தொழில்நுட்பத்தை ஹுவாவை சந்தைப்படுத்தினால் அமெரிக்க நிறுவனங்கள் சந்தையில் இருந்து வெளியேற்றப்படுமா?
அமெரிக்கா துணையின்றி திறன்பேசிகளை உற்பத்தி செய்ய முடியாது!
அமெரிக்கா தவிர்த்த மற்ற நாடுகளின் நிறுவனங்கள் திறன்பேசிகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தினாலும் அமெரிக்க நிறுவனங்களின் துணையின்றி செய்ய இயலாது. ஏனெனில் திறன்பேசிகள் இயங்க உதவும் அடிப்படை வன்பொருளான(Hardware) சிப்களை (Chips) அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள தைவானின் TSMC நிறுவனத்திடம் இருந்தே வடிவமைத்துப் பெறவேண்டும். திறன்பேசிகளை இயக்கும் பல்வேறு மென்பொருட்களை(Software) அமெரிக்க நிறுவனங்களிடமிருந்தே பெற வேண்டும். புதிய மென்பொருட்களை நாம் கூகுளின் Play Storஇல் இருந்தே நாம் பதிவிறக்கம் (Download) செய்ய முடியும்.
சுருக்கமாக எந்த புதுமைகள் செய்தாலும் அது அமெரிக்க நிறுவனங்களின் அடித்தளத்தில்தான் (Platform) செய்ய முடியும். தற்போது சீன நிறுவனத்தால் கொண்டுவரப்படும் 5G தொழில்நுட்பத்தால் இந்த அடித்தளம் கேள்விக்குள்ளாக்கப்படுமா என்றால் இப்போதைக்கு இல்லை என்றே பதில் கிடைக்கும். 5G வலைப்பின்னலை ஏற்படுத்த தேவையான தேவையான சாதனங்கள், **5G தொழில்நுட்பத்துக்குத் தோதான திறன்பேசிகள் ஆகியவற்றை விற்பதன் மூலம் ஹுவாவை பெரும் சந்தையையும் லாபத்தையும் அடையமுடியும் என்றாலும், திறன்பேசிகளை உற்பத்தி செய்யத் தேவைப்படும் சிப்களுக்கு அது இன்னும் TSMC நிறுவனத்தையே சார்ந்து இருக்கிறது. அதிலும் அதி உயர் தொழில்நுட்ப திறன்பேசிகளுக்குத் தேவையான நானோமீட்டர் அளவு சிப்களை உலகின் வேறு யாரிடமிருந்தும் பெறமுடியாத சூழல்.** அதன் உற்பத்தி தொழில்நுட்பம் வேறு யாரிடமும் இல்லை.
உலகில் அதிகம் திறன்பேசி விற்பனை செய்யும் நிறுவனங்களில் சாம்சங் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக உள்ள ஹுவாவை நிறுவனத்துக்கு இந்த நானோசிப்களை விற்பனை செய்ய அமெரிக்கா தற்போது தடை விதித்து இருக்கிறது. முன்பு மற்றொரு சீன திறன்பேசி உற்பத்தி செய்யும் நிறுவனமான ZTEக்கு இந்த சிப்களை விற்க அமெரிக்கா தடை விதித்தபோது அது சந்தையில் இருந்தே வெளியேற வேண்டி வந்தது.
அப்படியென்றால் ஹுவாவையின் எதிர்காலம் இன்று கேள்விக்குள்ளாகும் நிலையிலேயே இருக்கிறது. அப்படி இருக்க 5G தொழில்நுட்பத்தை ஹுவாவை சந்தைப்படுத்துவதைத் தடுக்க அமெரிக்கா ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும்?
5G வெறும் வேகம் சார்ந்தது மட்டுமல்ல!
5G வந்தால் காணொலிகள் இன்னும் துல்லியமாகவும் பதிவிறக்கம் வேகமாகவும் இருக்கும். அவ்வளவுதானே… இதற்கு எதற்கு அமெரிக்க – சீன வர்த்தகப் போர், சீன நிறுவனங்களின் மீது வர்த்தகத் தடை, தென்சீனக் கடலில் அமெரிக்கப் போர்க்கப்பல்களின் அணிவகுப்பு, இந்தியப் பெருங்கடலில் இந்திய – அமெரிக்கப் போர்க்கப்பல்களின் ஒத்திகை, இமயமலையில் இந்திய – சீன ராணுவ மோதல் என்று பூதாகாரம் ஆக்குகிறார்கள் என நமக்குத் தோன்றலாம்.
இந்த 5G வலைப்பின்னல் வெறும் வேகம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அதிநவீன பொருட்களைத் தானியங்கி (Automation) முறையில் உற்பத்தி செய்வதில் இது புதிய புரட்சியை உருவாக்கும் என்கிறார்கள். இந்த தானியங்கி உற்பத்தி பொதுவாக உணரிகளின் (Sensors) மூலமாகவே கட்டுப்படுத்தப்படும். ஓர் உணரியிலிருந்து அடுத்த உணரிக்குச் செல்லும் சமிக்கையின் வேகம் இதன்மூலம் அதிகரிக்கும். அதன்மூலம் அதி உயர் பொருட்களின் தரமும், உருவாக்கும் வேகமும் கூடும். உற்பத்தி செலவுகள் குறையும்.
தற்போது பெட்ரோலில் இயங்கும் மகிழுந்துகளுக்கு (Car) பதிலாக சேமக்கலங்களில் (Batteries) இயங்கும் அடுத்த தலைமுறை மகிழுந்துகள் சந்தைக்கு வர ஆரம்பித்திருக்கின்றன. அதை மனிதன் இயக்குவதற்குப் பதிலாகத் தானியங்கி தொழில்நுட்பத்தில்(Self-Driving) இயங்கும் வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறன. அதேபோல வாடகைக்கார்களின் இடத்தில் பறக்கும் ட்ரோன்கள் வரலாம். அவையும் இதே தொழில்நுட்பத்தில் இயங்கலாம். எல்லோரும் இதனை தனித்தனியாக வாங்கி பயன்படுத்தும் பட்சத்தில், இன்று சாலைகளில் ஏற்படும் நெரிசலைப் போல வான்வெளிகளில் வாகன நெரிசல் (Traffic) ஏற்படலாம்.
தானியங்கி மகிழுந்துகளும், ட்ரோன்களும் வேகமாகச் செல்லும்போது அவை இருக்கும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து விபத்தைத் தடுக்க அவற்றிலிருந்து சமிக்கைகளை வேகமாக 5G மூலம் பெறுவது அவசியம். கோடிக்கணக்கான வாகனங்களின் சமிக்கைகளைப் பெற்று அவற்றை பகுத்து (Analysis) ஆய்ந்து நெறிப்படுத்த அதிவேக கணினிகளும் (Super Computers) செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) கொண்ட இயந்திர மனிதர்களும் (Robat) தேவை. இன்று உலகம் முழுதும் நாம் பயன்படுத்தும் முகநூல் கணக்குகள் இப்படித்தான் பராமரிக்கப்படுகிறது.
அதேபோல மருத்துவத் துறையும் சிக்கலான அறுவை சிகிச்சைக்கு மனிதர்களுக்குப் பதிலாக இது போன்ற இயந்திர மனிதர்களைப் பயன்படுத்துவது, இந்த இயந்திர மனிதர்களைக் கொண்டு தூரத்தில் உள்ள தேர்ந்த மருத்துவர்கள் நோயாளிகளுக்கு வலைதளத் தொடர்பின் மூலம் சிகிச்சை அளிப்பது, அறுவை சிகிச்சை செய்வது என மாபெரும் மாற்றத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இன்று காகிதத்தால் ஆன பணத்தை எல்லோரும் பயன்படுத்தி வருகிறோம். அதை அச்சிடுவதும், புழக்கத்தில் விடுவதும், பணப் பரிமாற்றங்களைச் செய்வதும், பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்துவதும், அதன் மதிப்பைக் கட்டுப்படுத்துவதும், கண்காணிப்பதும், கள்ளப்பணப் புழக்கத்தைத் தடுப்பதும் பெரும் சிக்கலான செயலாக இருந்து வருகிறது. இதற்குப் பதிலாக மின்னணு (Digital) வடிவிலான பணத்தைப் புழக்கத்தில் கொண்டுவர பல்வேறு அரசுகளும் தயாராகி வருகின்றன. இந்த மின்னணு பணத்தை உருவாக்குவது, கட்டுப்படுத்துவது, பரிமாற்றங்களை மேற்கொள்வது என அனைத்துக்கும் அதிவேக கணினிகளும், செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரங்களும் தேவை.
இன்று இணையத்தில் பரிவர்த்தனை செய்யும்போது ஆகும் தாமதத்தைக் கவனித்திருப்போம். ஏனெனில் அது நமது கணக்கில் இருந்து வங்கியின் ஊடக விற்பனையாளரைச் சென்றடைய ஆகும் கால தாமதம். மின் வர்த்தகத்துக்கு (Online) இது பெரும் தடை. இந்த 5G தொழில்நுட்பமும், மின்னணு வடிவிலான பணமும் இதற்கான தீர்வாக அமையும் என்கிறார்கள். அதோடு இந்த தொழில்நுட்பம் நமக்கும், விற்பனையாளருக்கும் இடையில் இருக்கும் வங்கிகளின் பங்கைக் குறைக்கும் அல்லது இல்லாது ஆக்கும் என்கிறார்கள்.
இப்படி *எதிர்கால பொருளாதாரத்தையே மின்னணு மயமாக்கும் தன்மை கொண்டது இந்த 5G. அதோடு எதிர்கால மின்னணு யுகத்தைத் தீர்மானிக்கும் AI, அதிவேக கணினிகள், சேமக்கலன்கள் உள்ளிட்ட பத்து முக்கிய தொழில்நுட்பத்தில் ஒன்பது துறைகளில் சீன நிறுவனங்களே முன்னணியில் உள்ளன.* இந்த எதிர்கால மின்னணு யுகத்தை கட்டமைக்கப் பயன்படும் அச்சாணியாக இந்த 5G இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அப்படியென்றால் இன்று அமெரிக்க அடித்தளத்தில் இயங்கும் நிறுவனங்கள் நாளை சீன நிறுவனங்களின் அடித்தளத்தில் இயங்கும் நிலை வரும். இது அமெரிக்க நிறுவனங்களின் மேலாண்மையை கேள்விக்குட்படுத்தும் அல்லது சீன நிறுவனத்தைச் சார்ந்து அமெரிக்க நிறுவனங்கள் இயங்கும் நிலையை ஏற்படுத்தும். இதைத் தடுக்க ஒன்று அமெரிக்க நிறுவனங்கள் தமது சொந்த தொழில்நுட்பத்தைக் கண்டடைய வேண்டும் அல்லது சீன நிறுவனங்கள் இந்த கட்டமைப்பை ஏற்படுத்தாமல் தடுத்து நிறுத்த வேண்டும். முதல் தீர்வு சாத்தியமில்லை. ஆதலால் அமெரிக்கா இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையை நோக்கித் தள்ளப்பட்டது.
தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்…
கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.