Flow : விமர்சனம்!

Published On:

| By Minnambalam Desk

gints zilbalodis flow movie review

வாழ்க்கைக்கான பாடம்!

அனிமேஷன் படங்கள் என்றால் மிகப்பிரமாண்டமான கதைக்களம் இருக்கும். பேண்டஸியான ஒரு உலகம் அதில் காட்டப்படும். அங்கிருக்கும் பாத்திரங்கள் யதார்த்தத்திற்குச் சிறிதும் சம்பந்தமில்லாமல் இருக்கும். ஆனால், அவற்றின் உடல்மொழி ரசிகர்களை ஈர்க்கிற வகையில் இருக்கும். அனைத்துக்கும் மேலே, சுமார் ஒன்றரை மணி நேரம் நாம் அதுவரை எண்ணியிராத கனவுலகில் சஞ்சரிக்கிற வாய்ப்பினை அப்படம் தரும். அப்படிப்பட்ட அனிமேஷன் படங்களே ‘கிளாசிக்’ வரிசையில் இடம்பெற்றுள்ளன. gints zilbalodis flow movie review

அந்த வரிசையில் இன்னொன்றாக இடம்பெற முனைந்திருக்கிறது ‘ப்ளோ’ (Flow). இதனை இயக்கியிருப்பவர் ஹிண்ட்ஸ் ஜிபலோட்ஸ் (gints zilbalodis). இதன் எழுத்தாக்கம், ஒளிப்பதிவு படத்தொகுப்பு, இசையமைப்பு ஆகியவற்றில் இவரது பங்களிப்பு இருக்கிறது.

ஒரு பூனையின் பார்வையில்..! gints zilbalodis flow movie review

ஆளரவமற்ற ஒரு பகுதி. அங்கு ஒரு வீடு. அதில் ஒரு பூனை வசிக்கிறது. மெத்தை விரித்த கட்டிலில் தூங்குவது என்று சொகுசான ஒரு வாழ்வைத் தனிமையுடன் கழித்து வருகிறது.

அந்த இடம் முழுக்க, பூனை குறித்த சிலைகள், ஓவியங்கள் இருக்கின்றன. தொலைவில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் பிரமாண்டமாக ஒரு பூனை சிலை இருக்கிறது. ஆனால், அங்கு மனிதர்களே இல்லை.

ஒருநாள் அங்கு சில நாய்கள் வருகின்றன. அவற்றின் துரத்தலுக்கு இரையாகாமல் தப்பிக்கிறது அந்த பூனை. ஆனால், சில நிமிடங்கள் கழித்து அந்த நாய்கள் உயிர் பயத்துடன் ஓடி வருகின்றன. அவற்றின் பின்னே மான் கூட்டம் பின்னங்கால் பிடறியில் பட ஓட்டம் பிடிக்கிறது.

அப்போதுதான், பெரும் நீர் அலை அப்பகுதியைச் சுற்றி வளைப்பது அந்த பூனைக்குத் தெரிகிறது. உடனடியாக தத்தித் தாவிச் செல்லும் அது, அந்த நீரலையில் சிக்கிக் கொள்கிறது. ஒருவழியாகத் தப்பித்து, தான் இருக்கும் வீட்டினை அடைகிறது. அதன்பின்னே, ஒரு லேப்ரடார் நாயும் வருகிறது. தன்னுடன் அது நட்பு பாராட்டத் துடிப்பதைக் கண்டாலும், பூனை ஏற்றுக்கொள்வதாக இல்லை. மேலே தாவி அந்த வீட்டிற்குள் சென்றுவிடுகிறது.

அடுத்த நாள் காலையில் பொழுது புலர்கிறது. அந்த நாய் வீட்டின் அருகே சுற்றி வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அசாதாரணமாக ஏதோ நிகழப் போவதை அந்த பூனை உணர்கிறது.

அந்த நொடியில், வீட்டைச் சுற்றியுள்ள்ள நீர் மட்டம் உயர்வதைக் காண்கிறது. வீடு நிச்சயம் மூழ்கிவிடும் என்பது அப்பூனைக்குப் பிடிபடுகிறது. அந்த நேரத்தில், பூனையைத் துரத்தி வந்த நாய்கள் ஒரு படகில் வருகின்றன. அதில் அந்த நாய் ஏறி விடுகிறது. பூனையும் வரும் என்று அது எதிர்பார்க்கிறது. ஆனால், அது வரவில்லை.

அதன்பிறகு, தொலைவில் இருக்கும் பூனை சிலையின் மீதேறுகிறது அந்த பூனை. ஆனால், அதனை மூழ்கடிக்கும் அளவுக்கு நீர் பெருக்கெடுக்கிறது. ‘இனி நம் கதை அவ்வளவுதான்’ என்று அந்த பூனை நினைக்கிற நொடியில், ஒரு படகு வருவது அதன் கண்களுக்குத் தெரிகிறது. அது அருகே வர, அந்த பூனை அதிலேறிக் குதிக்கிறது.

அந்த படகில் ஏற்கனவே கேபிபரா விலங்கு ஒன்று இருக்கிறது. அதனைக் கண்டு மிரளும் பூனை, எதுவும் பேசாமல் அப்படகைச் சுற்றி வருகிறது.

மழை, காற்று தாண்டி அந்த படகு எங்கெங்கோ பயணிக்கிறது. தொடரும் அந்த பயணத்தில் நாரை போன்ற வெண்ணிறப் பறவை, ஏற்கனவே கண்ட நாய், ஒரு லெமூர், பிறகு தன்னைத் துரத்திய நாய் கூட்டம் ஆகியன இணைகின்றன.

தனிமையில் சுகம் காணும் அந்த பூனையால் இதர விலங்குகளுடன் நட்பு பாராட்ட முடிந்ததா? உலக அழிவுக்கான அந்தச் சூழல் ஒரு முடிவினைக் கண்டதா என்று சொல்கிறது ‘ப்ளோ’ படத்தின் மீதி.

மொத்தப் படமும் அந்த பூனையின் பார்வையிலேயே நமக்குத் தெரிய வருகிறது.

படம் முடிகிறபோது, நாம் அந்த பூனையாகவே மாறிவிடுகிறோம். அதுவே ’ப்ளோ’வின் வெற்றி.

பொதுவாக, அனிமேஷன் படங்கள் என்றால் விலங்குகள், பூச்சிகள், அவ்வளவு ஏன் ஒரு செல் உயிரினங்கள் கூட வசனம் பேசும். இந்தப் படத்தில் வசனங்களுக்கு இடம் தரப்படவில்லை. மியாவ் சத்தம் முதல் உயிருக்கு அஞ்சி நடுங்கும்போது வெளிப்படும் ஓசை போன்றவையே படம் முழுக்க நிறைந்திருக்கின்றன. ஆதலால், இதனை ஒரு மௌனப் படம் என்றும் கொள்ளலாம்.

அற்புதமான அனுபவம்! gints zilbalodis flow movie review

‘ப்ளோ’வை இயக்கியிருக்கும் ஹிண்ட்ஸ் ஜிபலோட்ஸ் ஒரு முப்பது வயது இளைஞர். 2010ஆம் ஆண்டு முதல் முறையாக இவர் உருவாக்கிய அனிமேஷன் குறும்படமான ‘ரஷ்’ வெளியாகியிருக்கிறது. இவர் லாட்வியா நாட்டைச் சேர்ந்தவர். அங்கு அனிமேஷன் பற்றி அறிய முறையான பயிற்சிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் கிடையாது. ஆனாலும், இணைய வழியில் தானாகவே தேடித் தேடிக் கற்றறிந்திருக்கிறார் ஹிண்ட்ஸ். அதன்பின் சில அனிமேஷன் குறும்படங்கள் தந்தவர், 2019இல் ‘அவே’ எனும் முழுநீளப்படத்தைத் தந்திருக்கிறார். அதுவும் அனிமேஷன் தான்.

அதுவரை ‘மாயா’ எனும் மென்பொருளைத் தனது ஆக்கத்திற்குப் பயன்படுத்தியவர், ‘ப்ளோ’வை உருவாக்க முயன்றபோது ‘ப்ளெண்டர்’ எனும் மென்பொருளைக் கற்றுக்கொண்டு பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள் அதன் உருவாக்கத்தில் செலவழித்திருக்கிறார்.

மெல்ல இப்படத்திற்குத் தேவையான மனித உழைப்பு மற்றும் பொருளாதார ஆதரவை ஹிண்ட்ஸ் பெற உதவியிருக்கிறது லாட்வியா தேசிய திரைப்பட மையம். பிறகு பெல்ஜியம், பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த சில அமைப்புகள், நிறுவனங்கள் உடன் இணைந்து செயல்பட்டு, இதனை முழுமையாக உருவாக்கியிருக்கிறார்.

லாட்வியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையிடப்பட்ட இப்படம், அங்கு அதிக வசூல் சாதனை பெற்ற படம் என்ற சிறப்பைப் பெற்றது. கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டதோடு கோல்டன் குளோப் விருதையும் பெற்றது.

ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றிருக்கிறது ‘ப்ளோ’. இத்தனைக்கும் இதனுடன் போட்டியிட்ட திரைப்படங்களைவிட இப்படத்தின் பட்ஜெட் 50, 60 மடங்கு குறைவு. அது ஒன்றே தற்போது இதன் மீதான ரசிகர்களின் கவனம் அதிகமாகக் காரணமாகியிருக்கிறது.

இந்த படத்தின் உருவாக்கத்தின்போது ‘ஸ்டோரி போர்டு’ உத்தி பயன்படுத்தப்படவில்லை. அதேநேரத்தில், இதில் ‘டெலிடட் சீன்ஸ்’ என்று அதிகப்படியான காட்சிகள் எதுவும் மீதமாகவில்லை.

அதாகப்பட்டது, மிகச்சரியாகத் திட்டமிட்டு, கவனமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது ‘ப்ளோ’. இதன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பைக் கவனித்திருக்கும் இயக்குனர் ஹிண்ட்ஸ் ஜிபலோட்ஸ், இதன் எழுத்தாக்கத்தில் மேட்டிஸ் ஹாஸா பங்கேற்றிருக்கிறார்.

எப்படி இப்படத்தின் எழுத்தாக்கம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறதோ, அதேபோல இதன் இசையும் மிகச்சிறப்பானது. அதனை ஹிண்ட்ஸ் உடன் இணைந்து அமைத்திருக்கிறார் ரிஹார்ட்ஸ் ஸலுபே.

பூனை எனும் ஒரு உயிரினத்தின் பயம், பதற்றம், ஆத்திரம், மிரட்சி, மகிழ்ச்சி, உவகை என்று பல உணர்வுகளை வெளிப்படுத்துகிற இடங்கள் இப்படத்தில் உண்டு. அதற்கேற்ற பின்னணி இசையைக் கொண்டிருக்கிறது இப்படம். அதுவும் வழக்கமாக நாம் கேட்ட மேற்கத்திய திரையிசை அனுபவங்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டிருக்கிறது.

’ப்ளோ’ மாதிரியான படங்களைப் பார்க்க அமர்ந்தவுடன், தொடக்கத்தில் சில நிமிடங்கள் நெளிய நேரிடலாம். ஆனால், கதையின் மையமான அப்பூனையின் கண்களாக நாம் மாறிடும்போது இப்படம் தரும் அனுபவம் அற்புதமானதாக இருக்கும்.

அனைத்தையும் தாண்டி ‘சக உயிர்களிடத்தில் அன்பை வீசு’ என்கிறது இப்படம். கூடவே, உலகம் அழியும் சூழலில் ஒவ்வொரு உயிரினமும் தானாகத் தனது எதிரியுடன் கைகோர்க்கும் என்கிறது. இது போல நாமாக உணர்கிற அளவுக்குப் பல தத்துவார்த்தமான அம்சங்கள் இதிலுண்டு. அவை அனைத்தும் வாழ்க்கைப் பாடங்கள் தான்.

வன்முறையின் தடம் அழுந்தப் பதிந்திருக்கிறதா என்று பார்த்து பார்த்து திரைப்படங்களை ரசிக்கும் மனங்களிடையே ‘ப்ளோ’வை பார்க்கச் சொல்லி சிபாரிசு செய்வது அர்த்தமற்றதுதான். என்ன செய்ய? அதைச் செய்யுமாறு நம்மை நிர்ப்பந்தப்படுத்தும் அளவுக்கு இருக்கிறது இப்படம் தரும் அனுபவம்!

உதயசங்கரன் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share