ஆச்சர்யமூட்டும் சிவராஜ்குமார் ‘டீஏஜிங்’
ஜெயிலர் படம் வந்தபிறகு, சிவராஜ்குமார் படங்களைத் தேடிப் பிடித்து பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அவரது நடிப்பில் வெளியான கன்னடப் படங்களின் தமிழ் பதிப்புகளையும் சிலர் பார்த்து வருகின்றனர். அப்படியொரு புகழுக்கு, ஜெயிலரில் அவர் வந்துபோன சில நிமிட காட்சிகளே காரணம் எனும்போது ஆச்சர்யம் அதிகமாகிறது. அதற்கான பலனைப் பெறும் விதமாக, ‘கோஸ்ட்’ திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
முழுக்க ‘கேங்க்ஸ்டர்’ படமாகத் தோற்றம் தந்தாலும், ‘இது ஒரு ஹெய்ஸ்ட் த்ரில்லர்’ என்று அப்படக்குழு தெரிவித்திருந்தது. அது தந்த ஆச்சர்யமே, படத்தைக் காணும் ஆர்வத்தைப் பெருக்கியது. படம் எப்படியிருக்கிறது?
சிறையைக் கைப்பற்றும் கைதிகள்
கர்நாடகாவிலுள்ள சிறைச்சாலையொன்றைத் தனியார்வசம் ஒப்படைப்பதற்கான தொடக்கவிழா நடைபெறத் திட்டமிடப்படுகிறது. அதில் கலந்துகொள்ள மத்திய அமைச்சரோடு முன்னாள் சிபிஐ தலைமை அதிகாரி வாமனனும் (பிரசாந்த் நாராயணன்) அங்கு வருகிறார். விழா நடந்துகொண்டிருக்கும்போது, திடீரென்று சில கைதிகள் ரகளையில் ஈடுபடுகின்றனர். அதன் தொடர்ச்சியாக, அந்த சிறைச்சாலையைக் கைப்பற்றுகின்றனர். வாமனன் அவர்களால் சுற்றிவளைக்கப்படுகிறார்.

அதையடுத்து, அந்த சிறைச்சாலையில் மாட்டிக்கொண்டவர்களை மீட்பதற்காக ஒரு தனிப்படை அமைக்கப்படுகிறது. அதற்கு உதவி கமிஷனர் செங்கண்ணா (ஜெயராம்) தலைமை ஏற்கிறார். அவரது நடிவடிக்கைகளால், அந்த கடத்தல் கும்பலின் செயல்பாடுகள் தடைபடுகின்றன.
சிறைவாசி ஒருவர், உள்ளே இருந்து போலீஸுக்கு உதவி செய்கிறார். அதன் தொடர்ச்சியாக, அந்த கடத்தல் கும்பலின் மூளையாகச் செயல்பட்ட நபர் யார் என்று அறிகிறார் செங்கண்ணா. அதிர்ச்சியில் உறைகிறார்.
காரணம், அந்த நபரின் பெயர் தளவாயி முத்தண்ணா (சிவராஜ்குமார்). ஒருகாலத்தில், அவர் அந்த மாநிலத்தையே ஆட்டிப் படைத்த ஒரு கேங்க்ஸ்டர். அவர் இறந்துவிட்டதாகவே ரௌடிகளும் காவல்துறையினரும் நம்புகின்றனர்.
சரி, அந்த நபர் ஏன் அந்த சிறைச்சாலையைக் கைப்பற்ற வேண்டும். அதற்கான பதிலாக, இன்னொரு கதையும் இடையே சொல்லப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு ஆலையை சிபிஐ சோதனையிடுகிறது. அங்கிருந்து 1,000 கிலோ தங்கம் கைப்பற்றப்படுகிறது. அதில் 100 கிலோ மட்டுமே அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. மீதமுள்ள 900 கிலோ தங்கம் என்னவானது என்று கேள்வி எழுப்புகிறார் சிபிஐயில் பணியாற்றும் பிரபு.
அதற்கடுத்த சில நாட்களில், அவர்தான் அந்த தங்கத்தைக் கொள்ளையடித்தார் என்று குற்றம்சாட்டப்படுகிறது. காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அவர், அங்கு தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு, அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் பிரபுவின் மனைவி கீதாவின் கைக்குக் கிடைக்கிறது. அவரும் ஒரு விபத்தில் இறந்து போகிறார்.
அந்த ஆலையில் நடந்த சோதனை முதல் பிரபு மற்றும் கீதாவின் வழக்கு விசாரணை முடியும் வரை சிபிஐயில் வெவ்வேறு பொறுப்புகளை வகித்தவர் வாமனன். அவர்தான், தற்போது அந்த சிறைச்சாலையைத் தனியார்வசம் ஒப்படைக்கும் நடவடிக்கையின் பின்னணியிலும் இருக்கிறார்.

வாமனன் ஏன் அந்த சிறைச்சாலையின் மீது அக்கறை காட்டுகிறார் என்று ஆராயும்போது, அவருக்கும் அந்த சிறைச்சாலையின் தலைமை அதிகாரிக்கும் இடையே நெருங்கிய நட்பு இருப்பது தெரிய வருகிறது. அதுவே, தளவாயி முத்தண்ணா கும்பல் அந்த சிறையைக் கைப்பற்றியதற்கான காரணமாகவும் அமைகிறது.
அது என்னவென்பதுதான் ‘கோஸ்ட்’ படத்தின் திரைக்கதையிலுள்ள முக்கிய முடிச்சு. அது விடுபடும்போது படமும் முடிவடைகிறது.
விறுவிறுப்பான காட்சிகள்
சிவராஜ்குமார் இதில் தளவாயி முத்தண்ணா பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது ஹீரோயிசம் நிச்சயம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அதேநேரத்தில், சண்டைக்காட்சிகளில் அவரது பெர்பார்மன்ஸ் நமக்கு உவப்பைத் தருவதாக இல்லை.
இந்தப் படத்தில் நாயகனுக்கு இணையான பாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெயராம். படம் முழுக்கவே அவரது பாத்திரம் இடம்பெற்றிருப்பதால், அவருக்கான முக்கியத்துவம் பெரிதாகக் குறையவில்லை. அதேநேரத்தில், பாதி திரைக்கதையிலேயே அவரது பாத்திரத்தின் சிறப்பம்சங்கள் திரையில் மழுங்கடிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
தமிழ் பதிப்புக்காக சிவராஜ்குமார், ஜெயராம் இருவரும் டப்பிங் பேசியிருப்பது நல்ல விஷயம்.
’கேஜிஎஃப்’பில் யாஷ் தாயாக நடித்த அர்ச்சனா ஜோயிஸ் இதில் சிறு வேடத்தில் தோன்றியுள்ளார். ’கோல்மால்’ உட்பட மிகச்சில தமிழ் படங்களில் நடித்த சத்யபிரகாஷ், ’நெடுஞ்சாலை’யில் இன்ஸ்பெக்டராக வந்த பிரசாந்த் நாராயணன் ஆகியோர் இதில் வில்லன்களாக வந்து போயிருக்கின்றனர். மூத்த கன்னட நடிகர் தத்தண்ணாவும் இதில் உண்டு.
இவர்கள் தவிர்த்து திரையில் தலைகாட்டியவர்கள், பின்னணியில் இருப்பவர்கள் என்று சுமார் 100 பேராவது இதில் தோன்றியிருப்பார்கள்.
சாம்பல், கருப்பு வண்ணங்களைச் சேர்த்துக் குழைத்து திரையில் பூசி, ‘இது ஒரு கேங்க்ஸ்டர் படம்’ என்ற எண்ணத்தை விதைக்கிறது மகேந்திர சிம்ஹாவின் ஒளிப்பதிவு.
தீபு எஸ்.குமாரின் படத்தொகுப்பில் கதை சீராக நகர்கிறது. ஆனால், அவர் சில இடங்களில் பயன்படுத்தியுள்ள ‘ட்ரான்சிஸன் எபெக்ட்’கள் நம் கண்களைப் பதம் பார்க்கின்றன.

மோகன் பி கெரேவின் தயாரிப்பு வடிவமைப்பு, துரு பிடித்தாற் போன்ற தோற்றம் திரையில் படியக் காரணமாயிருக்கிறது. அதனைச் சாத்தியப்படுத்த விஷுவல் எபெக்ட்ஸ், டிஐ உள்ளிட்டவை திறம்படக் கையாளப்பட்டிருக்கின்றன. ஆனாலும், படத்தின் பட்ஜெட் பல இடங்களில் ‘ஹாஹா..’ என்கிறது.
’கேஜிஎஃப்’ தாக்கத்தில், இப்படத்திலும் காட்சிக்குக் காட்சி பின்னணி இசையால் நிரப்பும் பணி கையாளப்பட்டுள்ளது. அர்ஜுன் ஜென்யா அதனைச் சாதித்திருக்கிறார். ஆனாலும், எல்லா இடங்களிலும் அவரது இசை நமக்குத் திருப்தியைத் தந்துவிடுவதில்லை.
ஸ்ரீனிவாஸ் இப்படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார். ’மனிஹெய்ஸ்ட்’ வெப்சீரிஸ் உட்படச் சில படைப்புகளின் தாக்கம் காட்சிகளிலும் கதாபாத்திர வடிவமைப்பிலும் தெரிகிறது. இறுதியாக வரும் திருப்பத்தை முன்வைத்து கிளைமேக்ஸில் ஒரு பிளாஷ்பேக் வைப்பதற்குப் பதிலாக, நிகழ்காலத்தையும் கடந்தகாலத்தையும் பிரித்துக் காட்டும் காட்சிகளைத் தொடர்ந்தாற்போல அடுக்கியிருப்பது புத்திசாலித்தனமான உத்தி. அதையும் தாண்டி, இரண்டாம் பாகத்திற்கான தொடக்கத்தைக் காட்டிய விதம் ஆகச்சிறப்பு.
டீஏஜிங் நுட்பம்
’கோஸ்ட்’ படம் முழுக்க முழுக்க சிவராஜ்குமாரின் ஹீரோயிசத்தை சார்ந்து அமைந்துள்ளது. ஆனால், அது எந்த இடத்தில் எல்லை தாண்டிவிடக் கூடாது என்பதில் கவனத்தைப் பாய்ச்சியிருக்கிறார் இயக்குனர். அதுவே, அனைத்து தரப்பு ரசிகர்களும் மகிழும்படியான ஒரு காட்சியனுபவத்தைத் தர உதவியிருக்கிறது.
இதில், சிவராஜ்குமார் இளமைக்கோலத்தில் உலா வரும் காட்சிகள் உண்டு. அதனைப் பார்க்கும் எவரும் ‘இது மறைந்த புனித் ராஜ்குமாரா’ என்று கேட்பது சகஜம். அந்த அளவுக்குத் தனது பழைய உருவத்தை ‘டீஏஜிங்’ நுட்பம் மற்றும் ப்ரோஸ்தடிக் மேக்கப் உதவியுடன் திரையில் பிரதிபலித்திருக்கிறார் சிவராஜ்குமார். சில ஷாட்களில் அவரது கண் பார்வை முகபாவனைகளுக்கு எதிர்த்திசையில் அமைந்திருப்பதைச் சரிப்படுத்தியிருக்கலாம்.
மற்றபடி, அந்த ஷாட்கள் அனைத்தும் சிவராஜ்குமார் ரசிகர்களுக்குக் குதூகலம் தரும் வகையில் அமைந்துள்ளன.
பரபரப்பான ஹெய்ஸ்ட் த்ரில்லர் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு இப்படம் திருப்தி தரும். அதேநேரத்தில், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் எண்டர்டெயினர் வேண்டுமென்பவர்களுக்கு இப்படம் ஒவ்வாமையைத் தரும். அதனால், உங்கள் விருப்பம் எதுவென்று அறிந்து ‘கோஸ்ட்’ பார்க்கச் செல்வது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
ககன்யான் முதற்கட்ட சோதனை கடைசி விநாடியில் ஒத்திவைப்பு: காரணம் என்ன?
