ADVERTISEMENT

இருகரம் குவித்து இந்தியர்களை அழைக்கும் ஜெர்மனி – பின்னணி என்ன?

Published On:

| By christopher

Germany welcomes Indians with open arms

H-1B விசா முறையை அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென மாற்றியமைத்த நிலையில், அதற்கு பதிலடியாக, திறன்மிகு இந்தியர்களை தங்கள் நாட்டில் பணிபுரிய வருமாறு ஜெர்மன் நாட்டு தூதர் அழைப்பு இன்று (செப்டம்பர் 24) விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் பலநாடுகளுக்கு சென்று இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வரிசையில் இந்தியர்களின் கனவு தேசமாக என்றும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா.

ADVERTISEMENT

ஆனால் தனது எச்சரிக்கையை மீறி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன்படி இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் மீது 50 சதவீத இறக்குமதி வரி விதித்தார். இது கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

ADVERTISEMENT

அதன் தொடர்ச்சியாக வெளிநாட்டவர் அமெரிக்காவில் பணிபுரிவதற்கான வழங்கப்படுகிற H-1B விசா கட்டணம் ரூ.1.40 லட்சத்தில் இருந்து ரூ.88.09 லட்சமாக உயர்த்தினார். இதனால் அமெரிக்கா செல்ல காத்திருந்த இந்தியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று ஐநா பொது சபையில் பேசிய டிரம்ப், “ரஷ்யாவின் போருக்கு முக்கிய நிதி உதவியாளர்களாக சீனாவும் இந்தியாவும் உள்ளன. அவர்கள் மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்துள்ளது. இங்குள்ள அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இணைந்து, அவர்கள் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும்” என பகிரங்க அழைப்பு விடுத்தார்.

ADVERTISEMENT

இப்படி இந்தியாவுக்கு அடுத்தடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நெருக்கடி அளித்து வரும் நிலையில் தான் இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் டாக்டர் பிலிப் அக்கர்மன் திறமையான இந்தியர்களை தங்கள் நாட்டில் பணிபுரிய அழைத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ”ஜெர்மனியில் பணிபுரியும் ஒரு சராசரி இந்தியர், ஒரு சராசரி ஜெர்மனியரை விட அதிகமாக சம்பாதிக்கிறார். இது ஒரு நல்ல விஷயம்.

ஏனென்றால் அதிக சம்பளம் என்பது இந்தியர்கள் நமது சமூகத்திற்கும் நமது நலனுக்கும் பெரும் பங்களிப்பை வழங்குவதாகும். நாங்கள் கடின உழைப்பிலும் சிறந்த மக்களுக்கு சிறந்த வேலைகளை வழங்குவதிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

எங்கள் இடம்பெயர்வு கொள்கை ஒரு ஜெர்மன் காரைப் போலவே செயல்படுகிறது. இது நம்பகமானது, இது நவீனமானது, மேலும் இது கணிக்கக்கூடியது. இது ஜிக்-ஜாக்ஸ் இல்லாமல் ஒரே நேர் கோட்டில் செல்லும். முக்கியமாக நாட்டின் விதிகளை ஒரே இரவில் நாங்கள் மாற்றுவதில்லை” என அமெரிக்காவையும் மறைமுகமாக தாக்கி அழைப்பு விடுத்துள்ளார்.

திடீர் அழைப்பு ஏன்?

உண்மையில் ஜெர்மனியில் தற்போது மக்கள்தொகை நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வயதான மக்கள்தொகையின் விளைவுகளை ஈடுசெய்ய, 2040ஆம் ஆண்டு வரை ஜெர்மன் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 2,88,000 புலம்பெயர்ந்தோர் தேவைப்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அதன்படி ஜெர்மன் அரசாங்கம் 2025 ஆம் ஆண்டில் 2,00,000 தொழில்முறை விசாக்களை வழங்குவதாக கடந்த ஆண்டு உறுதியளித்தது. அதில் 90,000 இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இது முந்தைய 20,000 வரம்பிலிருந்து பெரும் முன்னேற்றமாக பார்க்கப்பட்டது.

இது தவிர ஏற்கனவே ஜெர்மனியில் சுமார் 1,30,000 இந்தியர்கள் வசித்து வேலை செய்கிறார்கள். அவர்களின் வருமானம் உள்ளூர் சராசரியை விட மிக அதிகம்.

2023 ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின் படி, முழுநேர ஜெர்மன் ஊழியர்களிடையே சராசரி சம்பளம் மாதத்திற்கு 3,945 யூரோக்களாக இருந்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிபுணர்கள் சராசரியாக 5,359 யூரோக்கள் சம்பாதித்ததாக அந்நாட்டு அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share