முகமது அனீஸ்
ஐரோப்பிய யூனியனின் மிக முக்கிய மற்றும் மிக அதிக மக்கள் வாழும் நாடு ஜெர்மனி. 8.3 கோடி மக்கள் வாழும் ஜெர்மனி, ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரமாகும். உலக அளவில் நான்காவது பெரிய பொருளாதாரமாகும்.
ஜெர்மனி மிகச் சிறந்த வளர்ந்த நாடுகளில் ஒன்று. மக்கள் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரம், சமூகப் பாதுகாப்பு, இலவச மருத்துவம், இலவச கல்வி, முதியோர் பென்ஷன் போன்ற பல சலுகைகளை அரசிடம் பெறுகின்றனர் .கார்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், மருந்துகள், இயந்திரங்கள் எனப் பல பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக ஜெர்மனி ஓர் அசைக்க முடியாத பொருளாதாரமாக வளர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு முன்பே உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனி ஒன்றாகும். முக்கியமாக மோட்டார் சம்பந்தமான நிறுவனங்கள் மற்ற நாடுகளில் பொருளாதாரத் தேக்கம் காரணமாகக் குறைந்த ஏற்றுமதி, தொழில்நுட்ப மாற்றம், புகை உமிழ்வு சம்பந்தமான விதிமுறைகள் எனப் பல பிரச்சினைகளால் பெரிய அளவில் சரிவைச் சந்திக்கத் தொடங்கின.
இந்த நிலையில் ஜெர்மனியில் முதல் தொற்று ஜனவரி இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்றைய அளவில் கிட்டத்தட்ட 1.5 லட்சம் மக்களுக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிக திறமையாக வைரஸ் தொற்றைக் கையாண்ட நாடாக ஜெர்மனி அறியபடுகிறது.
ஆரம்ப தொற்று ஹெய்ன்ஸ்பெர்க் என்னும் சிறிய ஊரில் நடந்த கார்னிவல் என்னும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட மக்களிலிருந்து பரவ தொடங்கியது. இந்த கார்னிவல் கொண்டாட்டம் மிக பிரசித்தி வாய்ந்த ஒரு நிகழ்ச்சி என்பதால் பல இடங்களிலிருந்து மக்கள் கலந்து கொள்வது வழக்கம். ஐரோப்பியக் குடியுரிமை உள்ளவர்களும், ஐரோப்பிய கடவுச் சீட்டு உள்ளவர்களும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் போய் வரலாம் என்பதால் இது போன்ற கார்னிவல் கொண்டாட்டங்களில் பல நாடுகளின் மக்கள் கூடுவார்கள். அதன் காரணமாகவே இந்த நோய் தொற்று ஜெர்மனியில் நுழைந்து பரவ தொடங்கியது எனலாம்.
கொரோனா பரவ தொடங்கியதும் ஜெர்மனி உடனே சுதாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஆரம்ப நாட்களில் எப்போதும்போல் சகஜமான வாழ்க்கை முறையையே அரசும் மக்களும் நடைமுறைப்படுத்தினர். அதனால் 100, 200 எனத் தொடங்கிய நோய் பரவல் 10,000, 20,000 என எகிற தொடங்கியது. நிலைமையின் வீரியத்தை உணர்ந்த அரசு உடனே விமானப் போக்குவரத்து, மற்ற நாடுகளிடையே உள்ள சாலை போக்குவரத்து, ஊரடங்கு என துரிதமான நடவடிக்கைகள் எடுத்து கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.
மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே 3 அன்று நிறைவடையும். பள்ளிகள், மத வழிபாட்டுத் தலங்கள், சிகை அலங்காரக் கடைகள், அருங்காட்சியகங்கள், மால்கள் என மக்கள் கூடும் வாய்ப்பு உள்ள அனைத்து இடங்களும் மூடப்பட்டன.
கொரோனா நோய் தொற்றை எதிர்நோக்கும் பொருட்டு ஜெர்மனி கிட்டத்தட்ட 822 பில்லியன் யூரோ அளவுக்கான நிவாரணத் திட்டங்கள் அறிவித்துள்ளது. இந்த நிவாரணம் சிறு நிறுவனங்கள், சுய தொழில் செய்வோர், பெரு நிறுவனங்கள், சாமானிய மக்கள் என அனைவரும் பயன்பெறும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் பணி செய்ய முடியா தொழிலாளர்களுக்கு அரசே 60 சதவிகிதம் அல்லது 67 சதவிகிதம் (குழந்தை உடையோர்) இந்த வருட இறுதி வரை சம்பளம் தரும் என்று அறிவித்துள்ளது.
வீட்டு வாடகை தர முடியாமல் போனாலும் மூன்று மாதங்கள் அவகாசம் தர உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் மின்சாரம், எரிவாயு, தொலைத்தொடர்பு மாத வாடகை செலுத்த முடியாமல் போனாலும் சேவையைத் துண்டிக்காமல் வழங்க அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டது.
குழந்தை வைத்திருக்கும் பெற்றோருக்கு 185 யூரோ, வேலை இழந்தோருக்கு எப்போதும் கிடைக்கும் 60 சதவிகிதம் சம்பளத்துக்குப் பதிலாக 70 சதவிகிதம் சம்பளம் என மக்கள் வேலையிழப்பு, மன உளைச்சல் என எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல் அரசு காத்தது முத்தாய்ப்பாகும்.
தனி மனிதராகத் தொழில்புரிவோர், இசை கலைஞர்கள், புகைப்பட நிபுணர்கள், சிறு நிறுவனங்கள் 9000 யூரோ முதல் 15000 யூரோ வரை அடுத்த மூன்று மாதங்கள் கடனாகப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
250 நபர்கள் மேல் பணிபுரியும் நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் பெற ஏதுவாக அரசு KFW என்னும் அரசு வங்கி மூலம் வழி வகை செய்துள்ளது.
மருத்துவமனைகள் வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு உடைகள், மருந்துகள் வாங்க எப்போதும் தரும் நிதியைவிட அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளது.
மேற்கண்ட நிதி உதவிகளோடு நின்று விடாமல் அரசு ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 60,000 பேருக்கு சோதனை செய்தது, இந்த கொடிய நோயை ஜெர்மனி வென்றதற்குத் துணை புரிந்தது என்றால் அது மிகையாகாது.
ஒவ்வோர் ஊரிலும் முக்கியமான இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைத்து மிக அதிக மக்களுக்குப் பரிசோதனை செய்து இன்று கொரோனாவை முழுதாக வெல்லாவிட்டாலும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி அடுத்த வாரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்பதே ஜெர்மனி மக்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்.
கட்டுரையாளர் குறிப்பு : திருச்சியைச் சேர்ந்த முகமது அனீஸ் தற்போது ஜெர்மனியின் ஸ்டுட்கர்ட் நகரத்தில் பிரபல நிறுவனத்தில் கார் வடிவமைப்புப் பொறியாளராக பணி செய்து வருகிறார். கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஜெர்மனியில் நடப்பவற்றை உற்று நோக்கி வரும் அனீஸ், அதன் அடிப்படையில் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.