“அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் அஜெண்டா எல்லாம் விரைவில் வெளியே வரும்” என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியுள்ளார். geethan jeevan reply to vijay
சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை மகளிர் தின வாழ்த்து தெரிவித்திருந்த தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், ”பெண்களை பாதுகாக்க தவறிய திமுக அரசை மாற்றுவோம்” என வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதேபோன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தினத்தை கொண்டாடிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் மகளிருக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களை கண்டித்து அதிமுக தரப்பில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக சென்னை தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பச்சைப் பொய்யைக் கூறி வருகிறார்கள்! geethan jeevan reply to vijay
அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் இது பெண்களுக்கான ஆட்சி என்று பெண்களால் பாராட்டப்பட்டு வரக்கூடிய ஆட்சியாக இருக்கிறது. அது நிறைய பேருக்கு வயிற்றெரிச்சலை தந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் தான் அதிமுக, பாஜக என எல்லா எதிர்க்கட்சிகளுமே சேர்ந்து நாடகம் போட்டார்கள். ஆனால் எந்த நாடகத்திலும் அவர்கள் வெற்றியடையவில்லை.
இந்த நிலையில் இன்றைக்கு பெண்களிடம் முதலமைச்சருக்கு கிடைக்கும் நற்பெயரை கெடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக பச்சைப் பொய்யைக் கூறி வருகிறார்கள். பெண்களின் வளர்ச்சி அதிகமாக வரும் பொழுது அதிமுக, பாஜக என அனைவராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இந்தியாவிற்கே முன்னோடி திட்டம்! geethan jeevan reply to vijay
அவர்களுக்கு ஒன்றை நினைவுப்படுத்திக் கொள்கிறேன். முதன்முதலில் பெண்களுக்கு சொத்துரிமை, வேலைவாய்ப்பு, காவல் துறையில் பெண்கள், சுயஉதவிக் குழுக்கள் என வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்களை வெளியே வரவைத்ததும், திருமண திட்டங்கள் மூலம் பெண்களை 12ஆம் வகுப்பு வரை படிக்க வைத்தது என எல்லாமே திமுக அரசுதான்.
ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் பயன்பெற்று இருக்கிறார்கள். இத்திட்டம் அவர்களின் பொருளாதார சுமையை நீக்கியுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பற்றி எள்ளி நகையாடியவர்கள், அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் தற்பொழுது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்து இருக்கிறார்கள்.
பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட மற்ற மாநிலங்களிலும் கூட இந்தத் திட்டத்தை வேறு பெயர் மாற்றி செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டம் தற்போது இந்தியாவிற்கே வழிகாட்டும் முன்னோடி திட்டமாக உள்ளது.
மார்ச் 2021 வரையுள்ள மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் கடன் ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மகளிர் பலர் இன்று தொழில்முனைவோராக உள்ளனர். அதே போன்று 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மகப்பேறு விடுப்பு தற்போது 12 மாதமாக உயர்த்தப்பட்டது.
பெண்கள் பாதுகாப்பை பொறுத்தவரையிலும் முதலமைச்சர் எந்த ஒரு சமரசத்திற்கும் இடம் கொடுக்காத வகையில் செயல்படுகிறார்.
2026 தேர்தலில் மக்கள் கரிப்பூசுவார்கள்! geethan jeevan reply to vijay
அதிமுக ஆட்சியில் வழக்கு போடுவதற்கும், எஃப்ஐஆர் பதிவு செய்வதற்குமே பெரிய போராட்டமாக இருந்தது. ஆனால் தற்போது திராவிட மாடல் ஆட்சியில் பெண்களின் புகார் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாக தைரியமாக வந்து புகார் கொடுக்கிறார்கள். இது திமுக அரசின் நடவடிக்கை மீதான நம்பிக்கையை காட்டுகிறது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், தேசிய அளவில் பாலியல் வன்புணர்வு வழக்குகளின் சராசர் 4.6. ஆனால் தமிழ்நாட்டின் சராசரி 0.7 எனத் தெரிவித்துள்ளது.
பெண்கள் சுதந்திரமாக பணியாற்றக் கூடிய சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்தியாவின் உற்பத்தி துறையில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் தான் 43 சதவீத பெண்கள் இருப்பதாக மத்திய அரசு கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது.
பெண்களுக்கு ஆதரவான, பாதுகாப்பான திமுக ஆட்சியின் மீது அவதூறு பரப்பும் எதிர்க்கட்சிகள் மீது 2026 தேர்தலில் மக்கள் கரிப்பூசுவார்கள்.
பாஜகவின் அஜெண்டா இது! geethan jeevan reply to vijay
திமுக அரசு மீது குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்ற மாநிலங்களுடன் தமிழ்நாட்டை ஒப்பீட்டு பார்க்கவேண்டும். அப்போது தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்களின் நிலவரம் என்ன என்பது தெரியும்.
பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவது பாஜகவின் அஜெண்டா. அதற்கேற்ப அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியிடுகிறார்கள். விஜய் ஷூட்டிங் நடப்பது போல அறிக்கை கொடுத்துவிட்டு செல்கிறார். அவர் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் நேரில் சென்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் அஜெண்டா எல்லாம் விரைவில் வெளியே வரும். திமுக அரசு எப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக இருக்கும் என்று தெரியும்” என கீதா ஜீவன் தெரிவித்தார்.