நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார் என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் இன்று (ஜூலை 12) குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் கலைஞரை இழிவாகவும், அவதூறாகவும் பேசியதை திமுக வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
ஒரு கட்சி தலைவர் என்பவர் தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் மற்ற தலைவர்களை இழிவாக பேசும்போது அதனை தடுப்பவர்களாக இருக்க வேண்டும். மாறாக, கலைஞரை பற்றி இழிவாக பேசும்போது மேடையில் உட்கார்ந்துகொண்டு சீமான் சிரித்துக்கொண்டிருக்கிறார். ஒரு தலைவனுக்கான பண்பு அவரிடம் இல்லை.
கலைஞர் மறைந்தபோது எதிர்கால இளைய சமுதாயத்திற்கு கலைஞர் ஒரு படிப்பினை என்று அவரை புகழ்ந்து பேசிய சீமான், இன்றைக்கு மாற்றி பேசுகிறார். ஆளும் கட்சியில் இருப்பதால் தான் எங்கள் கட்சி நிர்வாகிகள் பொறுமையாக இருக்கிறார்கள்.
அரசியல் ரீதியான விமர்சனங்களை வைத்தபோது நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசியதால் தான் அரசு நடவடிக்கை எடுத்தது.
சீமான் கருத்துரிமை பறிக்கப்படுகிறது என்று பேசுகிறார். ஆனால், சீமான் இயக்கிய தம்பி படத்தில் சாதி என்ற பெயரை உபயோகப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டார். ஆனால், மீண்டும் அதே வார்த்தையை அவர் வாயாலேயே சொல்கிறார்.
பட்டியல் இன பட்டியலில் 15-வது சாதியாக அந்த சொல் இருப்பது அவருக்கு தெரியும். வேண்டுமென்றே அவர் பேசுகிறார். இது தலைவனுக்கு அழகல்ல. சட்டம் ஒழுங்கு, சாதி, மத ரீதியாக பிரச்சனைகளை உண்டாக்க வேண்டும் என்பது தான் அவரது நோக்கம்.
பொறுப்பான முதல்வராக இருப்பதால் தான் முதல்வர் ஸ்டாலின் எங்களுடைய கட்சி தொண்டர்களை கட்டுப்பாட்டோடு வழிநடத்தி செல்கிறார்.
இலங்கை தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி உலக அளவில் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து சீமன் நன்கொடை பெற்று வருகிறார். இலங்கையில் ராஜ பக்ஷேவை எதிர்ப்பது போல தமிழகத்தில் திமுக அரசை எதிர்க்கிறார்.
மாறி மாறி பேசிவரும் சீமான் மனநிலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசியல் அறிவில்லாமல் இனியும் அவர் அரைவேக்காட்டுத்தனமாக பேசக்கூடாது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘இந்தியன் 2’ படம் எப்படி இருக்கு? – ட்விட்டர் விமர்சனம் இதோ!
ஆம்ஸ்ட்ராங் கொலை: பாஜக மீது சந்தேகத்தை கிளப்பும் திருமா… ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கை!
Comments are closed.