கடந்த சில வருடங்களாக, புதிதாகத் தோன்றிய சில புதிய மொபைல் தயாரிக்கும் நிறுவனங்களால் பெரும்பாலான முன்னணி நிறுவனங்களும் அவர்களால் விற்பனையை இழந்தனர். காரணம், புதிய நிறுவனங்கள் குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதே ஆகும். அதுமட்டுமின்றி, புதிதாக வசதிகளைக் கொண்டுள்ள சில மாடல்களை மக்கள் வரவேற்கத் தொடங்கியதால், முந்தைய மாடல்களும் சரியான விற்பனைபெற முடியாமல் இருந்தன. அதனால் htc நிறுவனமும் அவர்களின் பழைய மாடல்களை விற்பனை செய்ய முடியாமல், மொபைல் விற்பனையில் பின்தங்கியே இருந்தது. ஆனால் மீண்டும் அவர்களின் பழைய நிலையைப் பிடிக்க நினைக்கும் htc நிறுவனம், அதற்கான முயற்சிகளை செய்துவந்தது. அதன் வெளிப்பாடாக தற்போது புதிய மாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர் அந்நிறுவனத்தினர்.
htc Squeeze u என்ற புதிய மாடல் வரும் மே மாதம் 16ஆம் நாள் வெளியிடப்படும் என்றும், தைவானில் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கும், அமெரிக்கா நேரப்படி நியூயார்க் நகரில் காலை 2 மணிக்கும், லண்டன் நேரப்படி இரவு 7 மணிக்கும் இந்த புதிய மாடல் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வகையாக வெளியாகவிருக்கும் இந்த மாடலில், 4GB RAM மற்றும் 64GB Internal Storage கொண்டு ஒரு மாடலும், 6 GB RAM மற்றும் 128GB Internal Storage கொண்டு மற்றொரு மாடலும் வெளிவரவுள்ளது. பல நிறுவனங்களும் இந்த வசதிகளுடன் பல மொபைல்கள் வெளியிட்டுள்ளனர். எனவே, இந்த மாடலில் புதிதாக என்ன இருக்கிறது எனப் பார்த்தோமானால் Edge Sense என்ற புதிய வசதியை இதில் புதிதாக இணைத்துள்ளனர் htc நிறுவனத்தினர். மொபைல்களின் திரையில் தொடாமல் இரண்டு பக்கங்களிலும் Sensor-கள் மூலம் இயக்குவது போன்று வடிவமைத்துள்ளனர் என்பது அவர்கள் வெளியிட்ட வீடியோவில் தெளிவாகிறது. பிரீமியம் மாடலாக வெளியாகும் இந்த புதிய மொபைல் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெட்போன் ஜேக் இந்த மாடலில் வழங்கப்படவில்லை என்றும், அதற்குப் பதிலாக புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் ஒரு தகவலையும் htc நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.