அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,110 கோடி லஞ்சம் … அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு!

Published On:

| By Selvam

சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,110 கோடி) லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபர் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உள்பட 7 பேர் மீது அமெரிக்காவின் கிழக்கு நியூயார்க் நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் கெளதம் அதானி. இவரது அதானி குழுமம் பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2023-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது.

குறிப்பாக அதானி குழும அதிகாரிகள், அமெரிக்க நிறுவனங்கள் உள்பட பல தரப்பினரிடம் இருந்து கடனாகவும் பத்திரங்கள் மூலமாகவும் மூன்று பில்லியன் டாலர் நிதி திரட்டியதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. இந்த லஞ்ச விசாரணை அமெரிக்காவின் கிழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் பல மாதங்களாக நடந்து வருகிறது.

ஹிண்டன்பர்க்கின் இந்த குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது என்று அதானி நிறுவனம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், கடந்த 2020 – 2024-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சூரிய சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுக்க முயன்றதாக கிழக்கு நியூயார்க் நீதிமன்றம்  குற்றம் சாட்டியுள்ளது.

நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்துக்கான அமெரிக்க வழக்கறிஞர் ப்ரியான் பீஸ், “சூரிய சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க ஒரு விரிவான திட்டத்தை அதானி வகுத்துள்ளார். இந்த திட்டத்திற்காக அமெரிக்க நிறுவனங்களிடம் போலியான காரணங்களை சொல்லி நிதி திரட்டியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

துணை உதவி அட்டர்னி ஜெனரல் லிசா மில்லர், “அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் நோக்கில் அதானி மற்றும் அக்குழுமத்தின் மூத்த நிர்வாகிகள் குற்றம் செய்துள்ளனர். மேலும், சூரிய சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்தது தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நியூயார்க் நீதிமன்றத்தின் இந்த குற்றச்சாட்டு குறித்து அதானி குழுமம் இதுவரை பதில் எதுவும் அளிக்கவில்லை.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் சஸ்பெண்ட்… ஆளுநர் உத்தரவு!

கரூர்: பாசன வாய்க்காலில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சோகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share