கடந்த ஆண்டு இறுதி வரை பூண்டு ஒரு கிலோவுக்கு ரூ.500 வரை விற்பனையானது. இந்த விலை நீடிக்கும் என்ற நம்பிக்கையில் உதகை விவசாயிகள் அதிக அளவில் பூண்டு பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் பூண்டின் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். Garlic prices drop significantly
கடந்த ஆண்டு வடமாநிலங்களில் மழையால் பூண்டு அறுவடை பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பூண்டு வரத்து குறைந்தது. இதனால் அதன் விலை, 10 ஆண்டுகளாக இல்லாதபடி உயர்ந்தது. தற்போது மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் பூண்டு அறுவடை சீசன் தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பூண்டு வரத்து அதிகரித்து, அதன் விலை சரிந்துள்ளது.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் நீர் ஆதாரமுள்ள 12 சதவிகிதம் பரப்பளவில் மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டு 750 ஏக்கர் பரப்பில் வெள்ளைப் பூண்டு பயிரிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் விளையும் பூண்டுக்கு மருத்துவ குணம், சுவை மிகுந்து காணப்படுவதால், வெளி மாநிலங்களில் அதிக கிராக்கி உள்ளது. கடந்த ஆண்டு இறுதி வரை பூண்டு ஒரு கிலோவுக்கு ரூ.500 வரை அதிகபட்ச விலை கிடைத்தது. இந்த விலை நீடிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அதிகளவில் பூண்டு பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். Garlic prices drop significantly
இந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன் ஒரு கிலோவுக்கு ரூ.400 வரை விலை கிடைத்தது. தற்போது, படிப்படியாக விலை குறைந்து, மேட்டுப்பாளையம் மண்டிகளில் ரூ.60 முதல் ரூ.100 வரை மட்டும் விலை கிடைத்து வருகிறது. உற்பத்தி கணிசமாக உயர்ந்தும், திடீர் விலை சரிவால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள பூண்டு விவசாயிகள், “உதகை பூண்டுக்கு பொதுவாக விலை இருக்கும். கடந்த ஆண்டைபோலவே விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், நடப்பு போகத்தில் அதிக பரப்பில் பூண்டு பயிரிட்டுள்ளோம். ஆனால், திடீரென விலை சரிந்திருப்பது கவலை அளிக்கிறது.
தோட்டத்தில் பூண்டு விதைப்பது முதல் அறுவடை செய்வது வரை அதிக பணம் தேவைப்படுகிறது. மேலும், மண்டிகளில் கமிஷன், ஏற்று, இறக்கு கூலி, லாரி வாடகை உள்ளிட்ட செலவினங்களும் கூடுதலாகிறது. இந்த நிலையில், தொடரும் விலை சரிவால் பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது” என்று கவலை தெரிவித்துள்ளனர். Garlic prices drop significantly