கங்குவா, தங்கலான்: தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் செக்!

Published On:

| By Kavi

கங்குவா, தங்கலான் படத்தை வெளியிடுவதற்கு முன் தயாரிப்பாளர் 1 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் வி.ஐ.பிக்கள் பலர் 100 கோடிக்கும் அதிகமாக பணத்தை கொடுத்து வைத்திருந்தனர். இந்த பணத்தை அவர் பலருக்கு கடனாக கொடுத்துள்ளார். ஆனால் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார்.

பின்னர் அவர் மரணமடைந்துவிட்ட நிலையில், அவரது சொத்துகளை சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் சொத்தாட்சியர் என்று அழைக்கப்படும் ஆபிஸ் அசைனி நிர்வகித்து வருகிறார்.

அர்ஜூன்லாலிடம் கடன் வாங்கியவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்.

அர்ஜூன்லாலிடம் ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் 2013ஆம் ஆண்டு கடன் வாங்கியிருந்தனர்.

இந்த பணத்தை வட்டியுடன் திரும்ப கேட்டு சொத்தாட்சியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில், “செப்டம்பர் 2011 மற்றும் அக்டோபர் 2012க்கு இடையில் வெவ்வேறு தேதிகளில் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.12.85 கோடி அர்ஜூன்லால் பணம் கொடுத்திருக்கிறார். இதில் 2.5 கோடி ரூபாய் மட்டும் திருப்பி கொடுத்துவிட்டனர். இன்னும் 10.35 கோடி ரூபாய் கொடுக்கவில்லை.

எனவே டிசம்பர் 2013 முதல் 18 சதவீத வட்டி, வழக்கறிஞர் கட்டணம் ரூ.10.35 கோடி அசல் தொகை ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக 24.36 கோடி ரூபாய் டெபாசிட் செய்யுமாறு தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த தொகை வழங்காத ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்கள் என்று அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கை இன்று (ஆகஸ்ட் 12) விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் அமர்வு, ஸ்டியோ க்ரீன் தயாரிப்பில் வெளியாகவுள்ள ‘தங்கலான்’ படத்தை வெளியிடும் முன், அதாவது வருகிற 14ஆம் தேதிக்குள் ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும்.

அதுபோன்று அடுத்த படமான ‘கங்குவா’ படத்தை வெளியிடுவதற்கு முன் 1 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கான அறிக்கையை பட வெளியீட்டுக்கு முன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டனர்.

தொடர்ந்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கு : EDக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்… தீர்ப்பு ஒத்திவைப்பு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share