IND VS ENG : சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்தியா அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ganguly sachin reaction on gill and jaiswal 100
இந்திய அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்தியா அணி தங்களது முதல் தொடராக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி என பெயரிடப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கியது.
போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல்நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்துள்ளது. இது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இந்திய அணி முதல் நாளில் குவித்த மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
ஜெய்ஸ்வால், சுப்மன் அபார சதம்!
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை துவக்க ஜோடியான ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் குவித்தனர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 42 ரன்களில் வெளியேறினார். அதனையடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய அறிமுக வீரரான சாய் சுதர்சன் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.

எனினும் நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து ரன் குவித்தார். நிதானமாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் (101) இங்கிலாந்து மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து சுப்மன் கில்லும் (127*) கேப்டனாக தனது முதல் போட்டியிலேயே சதத்தை பதிவு செய்து விளையாடி வருகிறார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வரும் ரிஷப் பந்தும் 102 பந்துகளில் 65 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

முதல் நாளை பொறுத்தவரை 2 வீரர்கள் சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் கைவசம் 7 விக்கெட்டுகளுடன் 359 ரன்கள் குவித்துள்ள நிலையில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இதுதொடர்பாக இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் தனது மகிழ்ச்சியை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த மூன்றாவது சதம் யார் அடிப்பார்?
அவர், “ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரால் அமைக்கப்பட்ட உறுதியான அடித்தளம் இந்தியாவுக்கு ஒரு நல்ல நாளைக் கொண்டாட உதவியது. ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில்லின்
அற்புதமான சதங்களுக்கு வாழ்த்துக்கள். ரிஷப் பந்தின் பங்களிப்பு முக்கியமானது.
இந்தியாவின் இன்றைய பேட்டிங் 2002 ஆம் ஆண்டு இதே ஹெடிங்லியில் டெஸ்டை நினைவூட்டியது, அப்போது ராகுல், கங்குலி மற்றும் நான் மூவரும் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தோம். அந்த போட்டியில் வெற்றியும் பெற்றோம்.
இன்று, யஷஸ்வி மற்றும் சுப்மன் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளனர். இந்த முறை அந்த மூன்றாவது சதம் யார் அடிப்பார்?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு கங்குலி, “ஹாய் சேம்ப்.. இந்த முறை 4 சதம் இருக்கலாம் என நினைக்கிறேன். இந்த நல்ல சர்ஃபேஸில்.. பண்ட் மற்றும் கருண் நாயரும் சதம் அடிக்கலாம். 2002-ல் முதல் நாள் சர்ஃபேஸ்.. இதை விட கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது“ எனத் தெரிவித்துள்ளார்.
