மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டம், துர்காபூர் விரைவுச் சாலையில், கங்குலி மேற்கொண்ட பயணத்தின் போது இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. ganguly car accident
பர்தமன் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி கடந்த 20ஆம் தேதி சென்றார். அவருடன் அவரது கான்வாய் வாகனங்களும் புறப்பட்டுச் சென்றன.
இந்த நிலையில் வேகமாக வந்த ஒரு லாரி அதிக வேகத்தில் அவர்களது கான்வாயை முந்திச் சென்றது. இதனை எதிர்ப்பார்க்காத கங்குலியின் கார் ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்து வண்டியை நிறுத்தினார்.
இதனால் பெரிய அளவிலான மோதல் தவிர்க்கப்பட்டது. அதேவேளையில், பின்தொடர்ந்து வந்த கான்வாய் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. இதனால் சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில், கங்குலி உட்பட யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், கங்குலி சில நிமிடங்கள் சாலையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து போக்குவரத்தை சீர் செய்து, சேதமடைந்த இரண்டு கார்களையும் மீட்டனர். இதனால் திட்டமிட்டபடி பர்தமன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று கலந்துரையாடினார்.
அந்த விழாவில் மாணவர்கள் மற்றும் பல்வேறு பிரமுகர்களின் மத்தியில், கங்குலி தனது சர்வதேச கிரிக்கெட் அனுபவங்களையும், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பற்றிய பார்வைகளையும் பகிர்ந்தார்.
கங்குலி பயோபிக்! ganguly car accident
கங்குலி, இந்திய அணிக்காக 113 டெஸ்ட் மற்றும் 311 ஒருநாள் போட்டிகளில் பங்காற்றி, சர்வதேச கிரிக்கெட்டில் 18,575 ரன்களை எடுத்துள்ளார். இந்நிலையில் முன்னாள் கேப்டனின் வாழ்க்கை பற்றிய திரைப்படம் உருவாகி வருகிறது. பாலிவுட் சினிமா நடிகர் ராஜ்குமார் ராவ், கங்குலியின் பாத்திரத்தில் தான் நடிப்பதை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.