இயக்குனர் சுந்தர்.சியின் திரைப்படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. முதல் படமான ‘முறைமாமன்’ முதல் கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘மத கஜ ராஜா’ வரை அவரது பெரும்பாலான படைப்புகளில் அதுவே பிரதானமாக இருக்கும். போலவே கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம், சூரி, யோகிபாபு என்று கடந்த முப்பதாண்டுகளில் காமெடி நடிப்பில் உச்சம் தொட்ட பலரோடு கைகோர்த்து, நாம் நினைவில் கொள்ளத்தக்க காட்சிகளைத் தந்தவர். gangers trailer hits 32 lakhs views and trending
மிக முக்கியமாக, ‘சுந்தர்.சி படம் என்றால் எண்டர்டெயின்மெண்டுக்கு கியாரண்டி’ என்ற எண்ணத்தை ரசிகர்களிடத்தில் பதித்திருப்பவர். அப்படிப்பட்டவர் தானே இயக்கி நாயகனாக நடிக்கும் படத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வடிவேலு உடன் இணைகிறார் என்றால் எதிர்பார்ப்புக்கு எப்படிப் பஞ்சம் இருக்கும்?
சுந்தர்.சி இயக்கி நடிக்கும் ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் வரும் 24ஆம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. இதில் வடிவேலு மட்டுமல்லாமல் பக்ஸ், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிங்கம்புலி, தீபாசங்கர், ஜான் விஜய், விச்சு விஸ்வநாத், தளபதி தினேஷ், சித்ரா லட்சுமணன், வாணி போஜன், வெங்கல் ராவ், சௌந்தர் என்று ஏற்கனவே காமெடியில் நம் நாடித்துடிப்பினை அறிந்த பலர் நடித்துள்ளனர்.

இது போக கேத்தரீன் த்ரெசா, வாணி போஜன், ஹரீஷ் பேரடி, மைம் கோபி, இளவரசு, அருள்தாஸ் என்று பலர் தலைகாட்டியிருக்கின்றனர். சுந்தர்.சி இயக்குகிற படம் என்பதால், காமெடி காட்சிகளில் இவர்களுக்கும் இடமிருக்கும் என்று நம்பலாம்.
இந்த படத்தில் வடிவேலு பல கெட்டப்களில் வருகிறார் என்பது இன்னொரு சிறப்பம்சம். சமீபத்தில் வெளியான ‘கேங்கர்ஸ்’ ட்ரெய்லர் சுமார் 32 லட்சம் பார்வைகளைப் பெற்று ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
‘ஒரு தனியார் பள்ளிக்கு விளையாட்டு ஆசிரியராக வருகிறார் அண்டர்கவர் போலீசான சுந்தர்.சி. அங்கிருக்கும் வடிவேலு, பக்ஸ், முனீஸ்காந்த், கேத்தரீன் உள்ளிட்ட ஆசிரியர்களையும் சில பணியாளர்களையும் சேர்த்துக்கொண்டு ஓரிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் 100 கோடி ரூபாயை லவட்டத் திட்டமிடுகிறார்.
பணம் இருக்கும் இடம் அருகே திருவிழா சூழல் இருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறார். அந்த திருட்டு முயற்சி எத்தனை சதவிகிதம் சொதப்பியது? எத்தனை சதவிகிதம் வெற்றியைத் தந்தது?’ என்று கோடிட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது ’கேங்கர்ஸ்’ ட்ரெய்லர்.
சத்யாவின் இசை, வேங்கட்ராகவன் மற்றும் பத்ரியின் எழுத்தாக்கம், பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு என்று களமிறங்கியிருக்கிறார் சுந்தர்.சி.
ஒருகாலத்தில் யு.கே.செந்தில்குமார் உடன் கைகோர்த்து செயல்பட்டது போன்று சமீபகாலமாக ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ணசாமி உடன் பணியாற்றி வருகிறார். ‘கேங்கர்ஸ்’ படத்திலும் அது தொடர்கிறது.

யதார்த்தம் சிறிதுமின்றி சினிமாத்தனத்துடன் காமெடி, ஆக்ஷன், கிளாமர், சென்டிமெண்ட் என்று முழுமையான கமர்ஷியல் சினிமாவை தருபவர் சுந்தர்.சி. இந்தப் படமும் அப்படித்தான் இருக்கும் என்று பட்டவர்த்தனமாகச் சொல்கிறது ‘கேங்கர்ஸ்’ ட்ரெய்லர்.
இதன் முடிவில், வயதானவராக வேடமிட்டிருக்கும் வடிவேலுவைப் பார்த்து ‘என்ன கையெல்லாம் இளமையா இருக்கு, தாடி மீசை மட்டும் நரைச்சிருக்கு’ என்று கேட்கிறார். அதற்கு, ‘நான் கழுத்துக்கு கீழே மட்டும் யோகா பண்றங்க’ என்று தழுதழுத்த குரலில் பயத்தை வெளிக்காட்டியவாறு வடிவேலு பதிலளிக்கிறார்.
நிச்சயம், இந்த இடம் தியேட்டரில் சிரிப்பலையை உருவாக்கும். ’இது போன்று சுமார் இருபது இடங்களில் சிரிக்க வைத்துவிட்டால் போதும், படம் சூப்பர்ஹிட்’ என்று ரசிகர்கள் ‘கமெண்ட்’ அடிக்கும்விதமாக ட்ரெய்லர் உள்ளதால் இப்போதே ’கேங்கர்ஸ்’ எதிர்பார்ப்பு அலை பெருகத் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம். அதற்கேற்ற பலன் கிடைக்குமா என்பதை வரும் 24ஆம் தேதி தியேட்டர்களில் தென்படும் அதிர்வுகளின் வழியே அறிந்துகொள்ளலாம்.!