தமிழ் திரையுலகம் கடந்த வாரம் ஒரே நாளில் இரண்டு பிரபலங்களின் திடீர் இழப்பை சந்தித்தது ரசிகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது. Gangai Amaran console Bharathiraja who lost his son
கடந்த 25 ஆம் தேதி அதிகாலையில் நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஹுசைனி ரத்த புற்றுநோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அன்று மாலையில் இயக்குனரும் நடிகருமான பாரதிராஜாவின் ஒரே மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மனோஜ் உடலுக்கு நடிகர்கள் விஜய், சூர்யா, கார்த்தி, யோகிபாபு உள்ளிட்ட திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது தன் மகனின் இழப்பை தாங்க முடியாமல் பாரதிராஜா கதறி அழுதது பலரையும் கண் கலங்க வைத்தது.
தன் ஒரே மகன் 48 வயதில் காலமான செய்தி, 87 வயதான பாரதிராஜாவையும், அவருடைய குடும்பத்தினரையும் உலுக்கியுள்ளது. இந்த நிலையில் அவரை திரையுலகினர் பலரும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து தேற்றி வருகின்றனர்.
அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும், இயக்குநருமான கங்கை அமரன் சமீபத்தில் பாரதிராஜாவை அவரது வீட்டில் சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, பாரதிராஜா நடிப்பில் 1980ஆம் ஆண்டு வெளியான கல்லுக்குள் ஈரம் படத்திலிருந்து, தான் எழுதிய ’சிறு பொன்மணி அசையும்’ பாடலை பாடிக்காட்டினார்.
தொடர்ந்து இந்த பாட்டை எழுதியபோது நடந்ததை பாரதிராஜாவிடம் நினைவூட்டி பேசினார் கங்கை அமரன். அவர் கூறுகையில், “இந்த பாட்டை 10 நிமிடத்தில் எழுதினேன். ஞாபகமிருக்கா? பாம்குரோவ் ஹோட்டலில் நீங்க தான், ‘இந்த பாட்டை எழுதிட்டு வானு சொன்னீங்க. நானும் வெளிய போயி 10 நிமிடத்தில் ஹெட்போன்ல மியூசிக் கேட்டு எழுதிட்டு வந்தேன். அத பாத்துட்டு நீங்க கூட, ‘நல்லா எழுதிருக்கடா நீ’ என்று பாராட்டுனீங்க. நான் ரொம்ப லக்கி பர்சன். இது மாறி எத்தன பேர நீங்க உருவாக்கி இருக்கீங்க” என்று பேசியுள்ளார்.