இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து இடையேயான மோதல் திரைத்துறையில் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது.
குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, “ஒரு பாடலில், இசை பெரிதா, மொழி பெரிதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது.
இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது மொழி. மொழி எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது இசை. இரண்டும் கூடினால்தான் அதற்குப் பாட்டு என்று பொருள். சில நேரங்களில், இசையை விட மொழி சிறந்ததாகவும், திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப் புரிந்து கொண்டவன் ஞானி. புரிந்துகொள்ளாதவன் அஞ்ஞானி” என்று இசையமைப்பாளர் இளையராஜாவை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கங்கை அமரன் வெளியிட்டுள்ள வீடியோவில், “இன்று நான் பேசுவதற்கு காரணம், வைரமுத்து தான். எங்களால் வளர்ந்தவர், எங்களால் தூக்கிவிடப்பட்டவர்.
எங்களால் லிஃப்டில் மேலே ஏறி வந்து பொன்மாலைப் பொழுது பாட்டு எழுதியவர். மனுஷனுக்கு எப்போதுமே ஒரு நன்றி வேண்டும். நம்மை வாழ வைத்தது இவர்கள் தான் என்ற எண்ணம் வேண்டும்.
பாரதிராஜா சொல்லவில்லை என்றால் இளையராஜா இசையில் பாடல் எழுதியிருக்க முடியாதே, என்று நினைத்து பார்த்திருந்தால் இந்த மாதிரி அவர் பேசியிருக்க மாட்டார்.
வைரமுத்துவின் பாடல்களை இளையராஜா செழுமைப்படுத்தாமல் இருந்திருந்தால் அவரது எதிர்காலமே ஜீரோவாக இருந்திருக்கும்.
வைரமுத்து நிச்சயமாக திறமை உள்ளவர் தான். ஆனால், அதிகமான பாப்புலரிட்டி அவர் பாடலுக்கு வந்தவுடன் கர்வம் தலைக்கேறிவிட்டது.
இளையராஜாவிடம் தொடர்ந்து பாடல் எழுதி இருந்தால் இதே கர்வம் அவருக்கு வந்திருக்காது. இளையராஜாவிடம் இருந்த நட்பை இப்படி கொச்சப்படுத்துவார் என்று நான் நினைத்து பார்க்கவில்லை.
எனக்கு தெரிந்து வைரமுத்துவின் ஒன்று அல்லது இரண்டு பாடலுக்கு தான் இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஆனால், மீதமுள்ள அத்தனை பாடல்களுக்கும் இளையராஜா ட்யூன் கொடுத்த பிறகு தான் வைரமுத்து பாடல் எழுதினார். சரியாக எழுதியிருக்கிறாரா இல்லையா என்பது வேறு விஷயம்.
இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையில் என்ன தகராறு நடந்தது என்று எனக்கு தெரியாது. அதையெல்லாம் நாங்கள் கேட்க மாட்டோம். பாடல்களை வைத்து தான் இசை வளர வேண்டும் என்று அவசியமில்லை. எத்தனை வருடம் ஆனாலும் ட்யூன் தான் மனதில் நிற்கிறது.
ஆகவே வைரமுத்து அவர்களே இளையராஜாவைப் பற்றி ஒரு குற்றமோ, குறைகளோ நீங்கள் சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியதிருக்கும்” என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிளாக் ஷீப் ராம் நிஷாந்த்தை பாராட்டிய சமுத்திரக்கனி: ஏன் தெரியுமா?