திருச்சியில் ஒரு குடும்பத்தினரையே கட்டிப்போட்டு மர்ம கும்பல் நகை பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மணியங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் அமர்ஜோதி (52). விவசாயி.
இவர் நேற்று (ஆகஸ்ட் 6) இரவு தனது வீட்டில், மனைவி பச்சையம்மாள் மற்றும் மகள் லேகா ஸ்ரீ, மகன் அருணகிரி ஆகியோருடன் இருந்தார்.
அப்போது, வீட்டின் அருகே உள்ள வாழைத்தோட்டம் வழியாக 5 பேர் வந்துள்ளனர்.
இவர்கள் வீட்டில் இருந்த நான்கு பேரையும், கைறால் கட்டிப் போட்டு, வாயில் டேப்பை வைத்து ஒட்டி விட்டு சினிமா பாணியில் கத்தியை காட்டி, பணம் நகையெல்லாம் எங்கே இருக்கிறது என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.
தொடர்ந்து வீட்டையே அலசி சுமார் ஒரு லட்சம் ரொக்க பணம் மற்றும் பீரோவில் இருந்த 10 சவரன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பித்துள்ளனர்.
கொள்ளை கும்பல் முகமூடி மற்றும் கையுறை அணிந்திருந்ததால் யார் என அடையாளம் தெரியவில்லை என்று அமர்ஜோதி போலீசாரிடம் கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணையில் அந்த கும்பல் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக புத்தாநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோப்பநாய், கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்துள்ளனர்.
ஆனால் இதுவரை கொள்ளை கும்பல் சிக்கவில்லை.
இதேபோன்று, திட்டக்குடியில் வேப்பங்கொட்டை பொறுக்கி கொண்டிருந்த பெண்ணை கொலை செய்து தாலி, தோடு ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லம் (50), கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10 மணி அளவில் தனது வயலுக்கு சென்று வேப்பங்கொட்டை பொறுக்கி கொண்டிருந்தார்.
பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் மாலை 4:30 மணியளவில் பக்கத்து வயலைச் சேர்ந்த ராமர், தனது வயலுக்கு செல்லும் வழியில் செல்லம் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து திட்டக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் செல்லத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் கொள்ளை கும்பல் செல்லம் கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் தங்க கம்மல் என 7.5பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக திட்டக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதுபோன்று அடுத்தடுத்து நடக்கும் கொலை கொள்ளை சம்பவங்கள் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
