தர்மபுரியில் தொழிலதிபர் ஒருவரிடம் போலீஸ் என்று கூறி ஒரு கும்பல் பணம் பறித்துள்ளது. Gang extorts money from businessman
தர்மபுரி மாவட்டம் அரூர் நகரப் பகுதியைச் சேர்ந்த குப்புராஜு மகனான தொழிலதிபர் வெங்கடேசன், ஒரு பெரிய பர்னிச்சர் கடையை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி அரூர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதில், “எங்கள் கடைக்கு வந்து செல்லும் போது பழக்கம் ஏற்பட்ட தொட்டாம்பட்டி நம்பியபட்டி கிராமத்தைச் சேர்ந்த வாசுகி, ‘நேரமிருக்கும் போது வீட்டுக்கு வந்துவிட்டு போங்க’ என்று கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அழைத்தார் . இதனால் நானும் எனது நண்பரும் கோதம்பட்டி செல்லும் வழியில் இருந்த வாசுகி வீட்டுக்கு சென்றோம். அங்கு சென்ற சிறிது நேரத்தில் திடீரென 5 பேர் உள்ளே வந்தனர். அவர்கள் போலீஸ் ஐடி கார்டை காட்டி, “நாங்கள் க்ரைம் டீம்” என்று கூறி எங்களை புகைப்படம் வீடியோ எடுத்தனர். பெண் ஒருவருடன் இருந்ததாக கூறி அந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு எங்களிடம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் அரூர் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன், எஸ்.ஐ சக்திவேல் மற்றும் தனிப்படை போலீசார் வெங்கடேசனை மிரட்டி பணம் பறித்தவர்களை கைது செய்தனர்.
இதுபற்றி நாம் விசாரணை அதிகாரிகளிடம் கேட்டபோது,
“அரூர் நகர் பகுதியில் பிரபல பர்னிச்சர் கடையை வைத்துள்ள வெங்கடேசன் செல்வாக்கு மிக்கவர். பெண்கள் விஷயத்தில் சபலமானவர். இந்த பலவீனத்தை கண்டறிந்து, நம்பியபட்டி கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல், அலெக்ஸ் என்ற பெரியசாமி, கார்த்தி, பிரசாந்த் மற்றும் நெருப்பாண்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் வாசுகியிடம் சொல்லி பர்னிச்சர் கடைக்காரர் வெங்கடேசனிடம் பேச சொல்லியிருக்கின்றனர்.

அவர்கள் சொன்னபடி, ‘எங்கள் வீட்டில் இளம் வயது பெண் ஒருவர் வந்திருக்கிறார்’ என்று கூறி வாசுகி அழைக்க, பர்னிச்சர் கடை வெங்கடேசனும் அவரது நண்பரும் வாசுகி வீட்டுக்குச் சென்றனர். அப்போதுதான் நெருப்பாண்டகுப்பம் வெங்கடேசன், கதிர்வேல், அலெக்ஸ் ஆகியோர் போலீஸ் ஐடி கார்டை காட்டி விபச்சார வழக்கு போட்டுவிடுவோம் என்று மிரட்டியிருக்கின்றனர்.

இதனால் பயந்து போன பர்னிச்சர் கடைக்காரர் வெங்கடேசன் சமரசம் பேசியிருக்கிறார். தொடர்ந்து தன்னை மிரட்டிய நெருப்பாண்டகுப்பம் வெங்கடேசனுக்கு 2.50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பர்னிச்சர் கடைக்காரருடன் சென்ற அவரது நண்பர் சமுதாயத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அரசு ஊழியர். இவர், 3 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

இருந்தாலும் அந்த கும்பல் தொடர்ந்து அவ்வபோது மிரட்டி பணம் கேட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் பர்னிச்சர் கடை உரிமையாளர் வெங்கடேசன் போலீஸ் உதவியை நாடினார்.
போலீசாரின் அறிவுரையின் பேரில், பணம் தருகிறேன் என்று கூறி நெருப்பாண்டகுப்பத்தை சேர்ந்த வெங்கடேசனை வரவழைத்தார் பர்னிச்சர் கடை உரிமையாளர் வெங்கடேசன். அதன்பேரில் அங்கு வந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான நெருப்பாண்டகுப்ப வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தி பின் வாசுகியை போலீசார் கைது செய்தனர். வாசுகியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “இதற்கெல்லாம் நெருப்பாண்டகுப்பம் வெங்கடேசன், அலெக்ஸ் என்கிற பெரியசாமி கதிர்வேல் ஆகியோர் தான் திட்டம் தீட்டினர். இதில் அலெக்ஸும், கதிர்வேலும் எங்கள் ஊரில் போலீசாக இருக்கிறார்கள்.
பயப்படாமல் செய்… பணம் தருகிறோம்… நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியதால் அவர்கள் சொன்னதை செய்தேன். பிறகு பணமும் கொடுத்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.

வாசுகி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அலெக்ஸிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது கதிர்வேல்(35), “நான் 2011 பேட்ச்சில் பணியில் சேர்ந்தேன். கடலூர் மத்திய சிறையில் ஜெயில் வார்டனாக வேலை செய்தேன். அப்போது நன்னடத்தை சரியில்லை என கூறி என்னை 2023ல் சஸ்பெண்ட் செய்துவிட்டனர். அந்த ஐடி கார்டை வைத்திருக்கிறேன்.
இந்தநிலையில் நெருப்பாண்டகுப்பம் வெங்கடேசன் தான், இப்படியெல்லாம் செய்யலாம்… நல்லா பணம் வரும் என்று ஆசைக்காட்டினான். எனவே இந்த தவறை செய்துவிட்டேன்” என்று கூறினார்.

அலெக்ஸிடம்(35) விசாரித்த போது, தமிழ்நாடு காவல்துறையில் 2013ல் சேர்ந்தேன். தொடர்ந்து 2 வருடம் வேலைக்கு செல்லாததால் 2017ல் பணியில் இருந்து நீக்கப்பட்டேன். அந்த ஐடி கார்டை வைத்துதான் போலீஸ் என்று மிரட்டினேன் என்று வாக்குமூலம் கொடுத்தார்” என்றனர்.
இதையடுத்து 66 வயதான வாசுகியும் கைது செய்யப்பட்டார். இவர்களுக்கு உடந்தையாக இருந்த பிரசாந்த், கார்த்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
வேறு யாரிடமாவது இவர்கள் பணம் பறித்திருக்கிறார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.