நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று (செப்டம்பர் 7) கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் தென்கைலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சிப்பிள்ளையார் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய அம்சமாக 150 கிலோ அளவில் பிரம்மாண்டமாக கொழுக்கட்டை செய்யப்பட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டது.
சென்னையில் 1500 சிலைகளுக்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ள நிலையில், பல்வேறு இடங்களிலும் வண்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவே பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் அந்தந்த தெருக்களில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. இன்று காலை முதல் அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயிலில் கடந்த 10 நாட்களாகவே சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து உற்சவரை வழிபட்டனர். இன்று அதிகாலை முதல் பிள்ளையார்பட்டிக்கு பக்தர்கள் வந்த வண்ணமாக இருப்பதால் அந்த பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. ராஜ அலங்காரத்தில் எழுந்தருளியுள்ள கற்பக விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயிலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு, சர்வ திவ்ய தரிசனம் நடைபெற்று வருகிறது.
இந்தக் கோயிலில் இன்று இரவு வரை சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுபோன்று கோவை புளியங்குளம் பெரிய முந்தி விநாயகர், கும்பகோணம் திருவலஞ்சுழி சுவேத விநாயகர் என தமிழகம் முழுவதும் விநாயகர் கோயில்களில் வழிபாடுகள் நடந்து வருகின்றன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : சென்னை NIS-ல் பணி!
டாப் 10 செய்திகள்: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் முதல் அயலக தமிழர்களுடன் முதல்வர் உரையாடல் வரை!