மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி கடந்த மார்ச் 24-ஆம் தேதி சல்பாஸ் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை முயற்சி செய்தார். கடந்த மூன்று நாட்களாக கோவை கேம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, இன்று (மார்ச் 28) அதிகாலை 5.05 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள அவல்பூந்துறை தோட்டத்தில் அவரது உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது.
கணேசமூர்த்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினரும் மதிமுகவின் மூத்த தலைவருமான கணேசமூர்த்தி உயிரிழந்த செய்திகேட்டு துயருற்றேன்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த கணேசமூர்த்தி ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…