விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து எழுந்த சந்தேகங்களுக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முதன்முறையாக பதில் அளித்தார். Gambhir Breaks Silence on Virat Rohit Retirement
ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு சீனியர் இந்திய அணி தயாராகி வருகிறது.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஓய்வு அறிவித்துள்ள நிலையில், அவர்கள் இல்லாத இந்திய அணிக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் சவாலாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

மூத்த வீரர்களின் ஓய்வுக்கு இந்திய அணியின் இந்தியா தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தான் காரணம் என்ற பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் நிலவுகிறது. எனினும் அதுகுறித்து இதுவரை எந்த பதிலும் தெரிவிக்காமல் இருவரும் அமைதி காத்து வந்தனர்.
இந்த நிலையில் ரோகித் மற்றும் விராட் ஓய்வு குறித்து கம்பீர் முதன்முறையாக இன்று (மே 23) செய்தியாளர்கள் மத்தியில் மனம் திறந்து பேசினார்.

யாருக்கும் உரிமை இல்லை!
அவர், “இரண்டு மூத்த வீரர்கள் இல்லாதது அணிக்கு சவால் தான். அதே வேளையில் சவாலை சமாளிக்க ’நான் தயாராக இருக்கிறேன்’ என சிலர் கையை உயர்த்தி பொறுப்பேதற்கு இச்சமயம் நல்ல வாய்ப்பாக அமையும். என் கணிப்பின் படி அதற்கு சிலர் தயாராகவே உள்ளனர் என நம்புகிறேன். இது அடுத்த தலைமுறைக்கான காலம்.
அதற்கு சிறந்த உதாரணம் இந்தாண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தான். உலக கிரிக்கெட்டில் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இல்லாத போதிலும், இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
அப்போது நான் கூறியது இது தான். ‘யாராவது அணியில் இருந்து விலக நேரிட்டால், நாட்டிற்காக விளையாட மற்றொருவருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். அவர்கள் சாதிப்பார்கள்’ என்றேன்.
ஓய்வு என்பது ஒரு வீரரின் தனிப்பட்ட முடிவு. பயிற்சியாளராக இருந்தாலும் சரி, தேர்வாளராக இருந்தாலும் சரி அல்லது இந்த நாட்டில் யாராக இருந்தாலும் சரி, யாருக்கும் ஒரு வீரரை ஓய்வு பெறுமாறு கட்டாயப்படுத்த எந்த உரிமையும் இல்லை.
நீங்கள் எப்போது ஆட்டத்தைத் தொடங்குகிறீர்கள், எப்போது முடிக்க விரும்புகிறீர்கள் என்பது மிகவும் தனிப்பட்ட முடிவு என்று நான் நினைக்கிறேன். அதில் யாருக்கும் உரிமை இல்லை.” என கம்பீர் தெரிவித்துள்ளார்.