பாமக என்றால் ராமதாஸ்.. ராமதாஸ் என்றால் பாமக. அன்புமணி துரோகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது என அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாமக தரப்பினர் இன்று (டிசம்பர் 29) செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் பாமக தலைவராக மீண்டும் ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூட்டணி குறித்து முடிவெடுக்க ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் கௌரவத் தலைவராக ஜி.கே. மணி, செயல் தலைவராக ஸ்ரீ காந்தி, பொதுச்செயலாளராக முரளி சங்கர் ஆகியோரை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருந்த சௌமியா அன்புமணி நீக்கப்பட்டு உள்ளார் . தற்போதைய புதிய தலைவராக ஸ்ரீ காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி பேசுகையில், “அன்புமணியால் மருத்துவர் ராமதாஸ் கண்கலங்கினார். பாமக ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தை சதியால் சூழ்ச்சியால் அபகரிக்க நினைத்தால் அது நடக்காது. பதவி ஆசையால் உருவாக்கப்பட்டது பாமக அல்ல. பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் தற்போது அன்புமணி பக்கம் சென்று உள்ளனர்.
தற்போது அன்புமணியை நம்பி சென்றவர்களும் கலக்கத்தில் தான் உள்ளனர். அன்புமணி செய்தது மாபெரும் துரோகம். உங்கள் மகன் அபகரிக்க நினைத்தால்.. உங்களுக்கு லட்சம் மகன்களாக நாங்கள் நிற்கிறோம். ராமதாஸுக்கு அன்புமணி செய்தது துரோகம்.. துரோகம்.. துரோகம்..
அன்புமணிக்கு எச்சரிக்கையாக சொல்கிறோம். பாமகவை உங்களால் கைப்பற்ற முடியாது. பாமக என்றால் ராமதாஸ்.. ராமதாஸ் என்றால் பாமக. அன்புமணி துரோகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. அன்புமணியின் அரசியல் கதை முடிவடைந்தது. இனி வேறு வழியை பாருங்கள். தை பிறந்தால் வழி பிறக்கும். அதே போல பாமகவுக்கும் அடுத்த ஆண்டு நல்ல காலம் பிறக்கும் என்று ஆவேசமாக தெரிவித்தார்.
