பாமகவிலேயே இல்லாத ஒருவர் என்னை எப்படி நீக்க முடியும்- ஜி.கே. மணி கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. நீக்கப்படுவதாக அன்புமணி தரப்பிலான பாமக தரப்பு தலைமையகம் அறிக்கை வெளியிட்ட நிலையில் பாமகவிலேயே இல்லாதவர் என்னை எப்படி நீக்க முடியும் என்று ஜி.கே.மணி கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி,”பாட்டாளி மக்கள் கட்சி என்று சொன்னால் அது மருத்துவர் ராமதாஸ்தான். 1980ல் இயக்கம் ஆரம்பித்தவர் மருத்துவர் ராமதாஸ். அன்றிலிருந்து இன்றுவரை அவருடன் இருக்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே நாடு முழுவதும் இருப்பவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களும் பேசும் ஒரே விஷயம் மருத்துவர் ராமதாஸ் தான்.

ADVERTISEMENT

ராமதாஸ் உடன் 46வது ஆண்டாக பயணிக்கிறேன். 25 ஆண்டுகள் கட்சி தலைவராக இருந்துள்ளேன்.இந்த சூழலில் என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக செய்தி வருகிறது என்றால் சிரிப்பதா? நகைப்பதா? அநாகரிகமா? இதை எவ்வாறு சொல்வது என்று தெரியவில்லை.

மனிதநேயம் உள்ள, மனிதப் பண்புள்ள மனிதனுக்கு இப்படிப்பட்ட சிந்தனை வருமா? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

மேலும் அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கி விட்டதாக மருத்துவர் ராமதாஸ் சொல்லிவிட்டார் அறிக்கை வாயிலாகவும் தெரிவித்துவிட்டார். அவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. ஏன் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை.

அடிப்படை உறுப்பினராகவே இல்லாத ஒருவர் எப்படி என்னை கட்சியிலிருந்து நீக்க முடியும். அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. எல்லோரையும் நீக்குவதற்குரிய அதிகாரமும் சேர்ப்பதற்கு உரிய அதிகாரமும் மருத்துவர் ராமதாஸிடம் தான் உள்ளது.

ADVERTISEMENT

அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயரையே சொல்லக்கூடாது என்று நான் சொல்லவில்லை மருத்துவர் ராமதாஸ் பலமுறை தெரிவித்துள்ளார்.
மேலும் என் பெயரையோ படத்தையோ கூட பயன்படுத்த கூடாது என்று சொல்லிவிட்டார்.

இதற்கு மேல் பாட்டாளி மக்கள் கட்சியில் உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது. என்ன தகுதி இருக்கிறது. இப்படி தகுதியே இல்லாத ஒருவர் என்னை நீக்கியதாக பார்த்தவர்கள் தெரிவித்தார்கள். அதில் கையெழுத்து கூட இல்லை. கையெழுத்திட்டாலும் அது செல்லாது என்பது வேறு.

யாரோ கொடுத்த எங்கிருந்தோ வந்த ஒரு செய்தியை நாங்கள் பெரிதாகவும், ஒரு பொருட்டாகவும் கூட எடுத்துக் கொள்ளவில்லை.

நீங்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர வேண்டும் என்றும் சொன்னால் ராமதாஸை சென்று பாருங்கள். அவர் சேர்த்துக்கொண்டால் கட்சியில் இருங்கள். சேர்த்துக்கொள்வாரா இல்லையா என்பது தெரியவில்லை நீங்கள் அவரைத்தான் சென்று பார்க்க வேண்டும்.”என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share