ராகுலுடன் இலங்கைப் பிரதமர் சந்திப்பு!

Published On:

| By Balaji

இந்தியா வந்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசினார்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே நேற்று முன்தினம் இந்தியா வந்தார். பிரதமர் மோடியை இன்று சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ள அவர், இந்தியா உதவியளிக்கும் யாழ்ப்பாண வீடமைப்பு திட்டங்கள் குறித்தும், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜ்நாத் சிங்கையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே நேற்று (அக்டோபர் 19) டெல்லியில் சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் ஷர்மா மற்றும் இலங்கை உயரதிகாரிகள் உடனிருந்தனர். சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராகுல் தனது முகநூல் பக்கத்தில், “வரலாறு மற்றும் கலாச்சார ரீதியாக இந்தியா-இலங்கை என இரு நாடுகளும் ஒன்றை ஒன்று நெருங்கிய தொடர்புகொண்டுள்ளன. ரணில் விக்ரமசிங்கேவின் இந்திய வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share