ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, நாளை காலை விண்ணில் பாயவுள்ளது பிஎஸ்எல்வி சி-45 விண்கலம். இதற்கான கவுன்ட்டவுன் இன்று (மார்ச் 31) காலையில் தொடங்கியது.
கடந்த வாரம் மிஷன் சக்தியின் கீழ் ஏ-சாட் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில், மூன்று வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்களைச் செலுத்தும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ள பிஎஸ்எல்வி சி-45 விண்கலம் நாளை காலை 9.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படவுள்ளது. இதன் மூலமாக, எமிசாட் என்னும் எலெக்ட்ரானிக் நுண்ணறிவுச் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இது மட்டுமல்லாமல் ஸ்பெயின், லித்துவேனியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் 28 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்படவுள்ளன.
பொதுமக்கள் விண்வெளி தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்வதற்காக, பிஎஸ்எல்வி சி-45 விண்கலம் ஏவுவதைப் பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 5,000 பேர் அமர்ந்து பார்வையிடும் அளவில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. ஏவுதளத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த கேலரி இன்று திறக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் பிஎஸ்எல்வி சி-44 விண்ணில் பாய்ந்தது. இதில் இணைக்கப்பட்ட மைக்ரோசாட் ஆர் மற்றும் கலாம்சாட் வி2 ஆகியன புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டன. முன்னதாக, பிஎஸ்எல்வி சி-45 விண்கலம் மார்ச் 21ஆம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த தேதி மாற்றப்பட்டது. இந்த விண்கலத்தின் நான்காவது நிலையில் சோலார் பேனல் முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படும் என்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நம்பிக்கை தெரிவித்துள்ளது.�,