சுபஸ்ரீயின் மரணக் குழி மீது பேனர்களா? 

Published On:

| By Balaji

இந்தியா – சீனா இடையேயான முறைசாரா உச்சி மாநாடு வரும் 12, 13 தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை வரவேற்று பேனர் வைக்க தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. இதை விசாரித்த நீதிமன்றம், பேனர் வைக்க அனுமதி வழங்கியதுடன், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பேனர் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அங்கீகாரம் இல்லாமல் பேனர் வைத்து அப்பாவிப் பெண் சுபஶ்ரீ உயிரிழப்புக்குக் காரணமான அதிமுக, அந்த உயிருக்கு ஓர் அனுதாபச் செய்திகூட தரவில்லை. அந்த மரணக் குழியின் ஈரம் காயும் முன், அடுத்த கட் அவுட்டுக்கு அனுமதி வாங்க உயர் நீதிமன்றத்திற்கு ஓடி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி.

ADVERTISEMENT

இந்த வேகத்தையும் அக்கறையையும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் காட்டியிருந்தால் பாராட்டலாம். வெட்டி பந்தாக்களிலும், போலிக் கெளரவங்களிலும் காலம் கடத்த நினைப்பதைத் தவிர, முதலமைச்சரின் செயல்பாடுகளில் சொல்லிக்கொள்வது மாதிரி எந்தச் சாதனையும் இல்லை” என்று தனது ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “பேனர் கூடாது என்பதை அமல்படுத்திவரும் தமிழக அரசே, மோடிக்கு பேனர் வைக்க, சட்டத்தையே வளைக்கப் பார்ப்பதா? அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்புச் சட்டம் மோடிக்கு மட்டும் பொருந்தாதா? மோடியின் சர்வாதிகாரத்துக்குத் துணைபோகும் அதிமுக அரசைக் கண்டிக்கிறோம். அதைக் கைவிட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இதுபற்றி சுபஸ்ரீ தாயார் கீதா அளித்த பேட்டியில், “சுபஸ்ரீ மறைந்த சம்பவத்தை இன்னும் மறக்கக்கூட முடியவில்லை. அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பேனர் வைக்க மாட்டோம் என்று கூறும்போது, அரசு மீண்டும் பேனர் வைக்கிறோம் எனக் கூறுவது மிகவும் வேதனையாக உள்ளது. என்னுடைய மகள் சுபஸ்ரீ உயிரிழந்தது போன்று வேறு எவருக்கும் நடந்துவிடக் கூடாது. பிரதமரை வரவேற்க பேனர் மட்டும்தான் இருக்கிறதா? வேறு வழிகளில் வரவேற்கலாம் அல்லவா” என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share