பா.நரேஷ்
பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் ஆகியவற்றை அடுத்து வணிகர்கள் வலைவிரித்துக் காத்திருக்கும் இடம் வேளாண் பல்கலைக் கழகங்கள்.
வேளாண் படிப்புகள்தான் வருங்காலம் என்ற பரப்புரையுடன் புதிய வேளாண் கல்லூரிகள் முழைத்திருக்கின்றன. Tamilnadu Agricultural Universityயின் (TNAU) கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த கல்லூரிகளின் எண்ணிக்கையைவிட, இப்போது இரண்டு மடங்கு அதிகக் கல்லூரிகள் வேளாண் படிப்புகளுக்குக்காகத் திறக்கப்பட்டிருக்கின்றன. பொறியியல் படிப்புக்கு இணையான ‘நன்கொடை’ வசூல்களுடன் பரபரத்துக்கொண்டிருக்கிறது வியாபாரம்.
கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களிடம் பேசினேன். “இங்க அக்ரிகல்ச்சர் படிக்க வர்றவங்களவிட, UPSC எக்ஸாம்களுக்கு தயாராகப் படிக்க வர்றவங்கதான் அதிகம். கல்லூரி வளாகத்துக்குள்ளையே அரசாஙக்த் தேர்வுகளுக்கான கோச்சிங் கிளாஸ் நடக்குது. இங்க படிச்சு முடிச்சவங்க பலபேரு, ஒண்ணு அரசாங்கத் தேர்வெழுதி அரசாங்க பணியாளர்களாகவோ இல்ல பேங்க் எக்ஸாம் எழுதி வங்கிகள்ல வேலைக்கோதான் சேர்ந்திருக்காங்க. அதுவும் அரசாங்க வேலையில விவசாயம் சம்மந்தமான வேலை செய்யறவங்களை எல்லாம் விரல் விட்டு எண்ணிடலாம். இந்த மாதிரி வேலைகளுக்குப் போக அக்ரிகல்ச்சர் எதுக்கு படிக்கணும்?” என்றார் சங்கீதா. தற்போது அவர் சென்னையிலுள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் சமூக நலத்துறையில் முதுகலைப் பட்டம் படித்துக்கொண்டிருக்கிறார்.
வேளாண் கல்லூரியில் படித்து அரசு வேளாண் துறையிலேயே வேலை செய்யும் சிலருடன் பேசினேன். “ வேளாண் படிப்புகள்ல சில குறை இருக்கு ப்ரோ. அவங்க முழுக்க முழுக்க இராசாயண விவசாயத்தைத்தான் பாடமா வெச்சிருக்காங்க. இப்போ கடந்த 5 வருஷமாத்தான் இயற்கை விவசாயம் நோக்கித் திரும்பியிருக்காங்க. பசுமைப் புரட்சி என்ற பேரழிவுல இந்த வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு மிகப் பெரிய பங்கிருக்கு. அரசு வேளாண் துறைகள்ல இருக்க மெத்தனத்தையெல்லாம் சொல்லி மாளாது. ரொம்ப போராடித்தான் இங்க கொஞ்சமாவது மாற்றம் கொண்டுவர முடியும். உண்மையிலேயே வேளாண் துறை மீது ஆர்வம் இருந்து, அது சார்ந்த தொழில்கள்ல ஈடுபடணும்னு நினைக்குறவங்க இதைப் படிக்கலாம். வேளாண் படிப்பும் அந்த டிகிரியும் ஒரு அடிப்படையா இருக்கும். வேலைவாய்ப்பு ஒண்ணும் அவ்வளவு பிரகாசமா இல்ல. எல்லா இடத்துல இருக்குறது போலத்தான் இருக்கு. கலை அறிவியல் படிப்புக்கும் இந்த வேளாண் படிப்புகளுக்கும் இருக்க வித்தியாசம், இங்க கொஞ்சம் அதிக மெனக்கெடல் தேவைப்படும். அதுக்குத் தயார்னா வேளாண் படிப்பை தாராளமா எடுக்கலாம்” என்கிறார் ஒருவர்.

“ஆனா, அரசாங்க வேளாண் பல்கலைக்கழகங்கள்ல மட்டும்தான் சேரணும்னு நான் சொல்லுவேன். ஏன்னா மத்த கல்லூரிகள் பெரும்பாலம் சம்பாதிக்கத்தான் கட்டப்பட்டிருக்கு. நான் அக்ரிகல்ச்சர் எடுத்தப்போ இந்தத் துறைக்கு அவ்வளவு மவுசு இல்ல. ஆனா இன்னைக்கு பொள்ளாச்சியில இருக்க ஒரு தனியார் வேளாண் பல்கலைக்கழக்த்துல ஒரு சீட்டுக்கு 8 லட்சத்துல இருந்து 15 லட்சம் வரைக்கும் கேக்கறாங்க. இந்த வேளாண் படிப்பை பத்தி ஒரு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி கடைசியில இதையும் பொறியியல் படிப்பு மாதிரி மாத்திடுவாங்களோன்னு பயமா இருக்கு தம்பி” என்றவர், அரசாங்க அதிகாரியாக இருப்பதால் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
’பிரபலமான படிப்பு’, ‘பிரகாசமான எதிர்பார்ப்பு உள்ள துறை’ என்ற விளம்பரங்களையும் பேச்சுக்களையும் நம்பி மாணவர்களை விரட்டாதீர்கள். அவர்களுக்கு எந்த துறையின்மீது பரிகாசம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள கொஞ்சம் நேரம் கொடுங்கள். உதவுகிறேன் என்ற பெயரில் பல்வேறு படிப்புகளின் பெயர்களைப் புதிதாக அவர்களிடம் திணித்து அவர்களைக் குழப்பாதீர்கள். நேரம் கொடுங்கள். எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க அவர்கள் விரும்புகிறார்களோ அந்த படிப்பு வழங்கும் கல்லூரிகளுக்கு நேரடியாகச் செல்லுங்கள்.
ஒரு துறையின் எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள மிக எளிமையான சக்திவாய்ந்த வழி ஒன்று இருக்கிறது. எந்தத் துறையைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களோ, அந்தத் துறையில் இரண்டாம் ஆண்டு அல்லது மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை நேரடியாக சந்தித்துப் பேசுங்கள். அவர்களைவிடத் தெளிவாக எந்தக் கல்வித் துறை வல்லுநராலும் உங்களுக்கு வழிகாட்ட முடியாது. கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் இதே வழிமுறையைப் பின்பற்றுங்கள். இது மாணவர்களின் எதிர்காலம் என்பதைப் புரிந்துகொண்டு நேரம் ஒதுக்கி சம்மந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்றுவாருங்கள். அங்கே படிக்கும் மாணவர்களிடம் மட்டும் பேசுங்கள். அவர்கள் நிச்சயமாக ஒரு தெளிவான வழிகாட்டுதலைக் கொடுப்பார்கள்.
மாணவர்களுக்கு நேரடி அனுபவத்தைப் பரிசளியுங்கள்!
[மூடப்பட வேண்டிய கல்லூரிகளும் திறக்கப்பட வேண்டிய கண்களும்](https://minnambalam.com/k/2019/05/05/34)
.
.
**
மேலும் படிக்க
**
.
[அமமுக சின்னத்தை அழித்தால் ரூ.1 லட்சம்: அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/05/10/27)
.
[டிஜிட்டல் திண்ணை: சசிகலா- எடப்பாடி: சமரச தூதர் யார்?](https://minnambalam.com/k/2019/05/09/80)
.
.
[காங்கிரஸுக்கு தூதுவிடும் தெலங்கானா முதல்வர்!](https://minnambalam.com/k/2019/05/09/48)
.
[சசிகலாவுக்குத் தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி](https://minnambalam.com/k/2019/05/09/26)
.
[தேனி விவகாரம்: பன்னீர் பதில்!](https://minnambalam.com/k/2019/05/09/51)
.




