மாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ். மதிய நேரத்தில் அசைவ உணவகங்களில் விரும்பி சாப்பிடும் சைடிஷாக இருக்கும் ஃபிஷ் ஃபிங்கர்ஸ். இதையெல்லாம் மீறி வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த சிக்கன் ஃபிங்கர்ஸ் எல்லா நேரத்திலும் சாப்பிடத் தூண்டும்.
**என்ன தேவை?**
சிக்கன் – 250 கிராம்
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – கால் டீஸ்பூன்
முட்டை – ஒன்று
எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்
மைதா – 3 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
பிரெட் தூள், உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
சிக்கனை வாங்கும்போதே சதைப்பகுதியாக விரல் சைஸுக்கு வெட்டி வாங்கவும். பிறகு, தண்ணீரில் அலசி நன்கு பிழிந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகாய்த்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி, எலுமிச்சைச் சாறு சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிக்கன் ஃபிங்கர்ஸ் பீஸ் எல்லாவற்றையும் சேர்த்துப் புரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் எடுத்து பிரெட் தூளில் புரட்டவும். எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிக்கன் ஃபிங்கர்ஸ் பீஸ்களைப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
**குறிப்பு**
பொரித்த எண்ணெயை மறுபடியும் உபயோகிக்க வேண்டாம். எனவே, தேவையான அளவு எண்ணெய் மட்டுமே ஊற்றிப் பொரித்தெடுக்கவும்.
[நேற்றைய ரெசிப்பி: லாலிபாப் சிக்கன்](https://minnambalam.com/k/2020/10/28/1)