ADVERTISEMENT

எச்.ராஜாவின் பேச்சு கண்டிக்கத்தக்கது!

Published On:

| By Balaji

கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதைக்கு மத உள்நோக்கம் கற்பித்து, அவருக்குக் கொலை மிரட்டல்கள் விடுவது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மனுஷ்யபுத்திரன் அளித்திருக்கும் புகார் மீது காவல் துறை விரைந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கேரள மழை வெள்ளம் தொடர்பாக, கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய “ஊழியின் நடனம்” கவிதைக்கு பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆற்றிய எதிர்வினை காரணமாக மனுஷ்யபுத்திரனுக்கு கொலை மிரட்டல்கள் வரத்தொடங்கின. இதனைத் தொடர்ந்து அவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று(ஆகஸ்ட் 22) வெளியிட்ட அறிக்கையில், “கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதிய ஒரு கவிதைக்கு மத உள்நோக்கம் கற்பித்து அவருக்குக் கொலை மிரட்டல்கள் விடுவது கண்டிக்கத்தக்கது.

குறிப்பாக பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் பேச்சுகள் அவர் சார்ந்த கட்சிக்குப் பெருமை உடையதாக இருக்கலாம், ஆனால் பொது வெளியில் கண்டிக்கத்தக்கது.

ADVERTISEMENT

என்னைக் கொல்ல விரும்புகிறார்கள்; எனக்கு ஏற்படும் எந்த அபாயத்திற்கும் அவர்தான் பொறுப்பு என்று வெளிப்படையாகவே மனுஷ்யபுத்திரன் கருத்து கூறியுள்ளார்.

இதனைக் காவல்துறை அலட்சியப்படுத்தாமல் ஊடகப் பெண்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகர் விஷயத்தில் காவல்துறை நடந்து கொண்ட தவறான அணுகுமுறையை பின்பற்றாமல், தமிழகம் அறிந்த கவிஞர் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்பது அசாதாரணமானது. காவல்துறை விரைந்து செயல்படுதல் அவசியம்” என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share