தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வரும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் 15 தினங்களே உள்ளன. மக்களவைத் தேர்தலோடு, இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கியுள்ளதால் அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோரா ஆய்வு செய்ய இருக்கிறார்.
இதற்காக அவர், இன்று இரவு சென்னை வரவுள்ளதாகத் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் நாளை காலை 10 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் சுனில் அரோரா ஆலோசனை நடத்துவார். ஏப்ரல் 4ஆம் தேதி காலை வருமான வரித்துறை அலுவலர் கூட்டமும், அதைத்தொடர்ந்து தலைமைச் செயலாளர், டிஜிபி, உள்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெறவுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
வேலூரில் வருமான வரித் துறை சோதனை தொடர்ந்து நடந்து வருவதாகவும், அதுதொடர்பாக அறிக்கை இன்னும் வரவில்லை. அறிக்கை வந்தவுடன் அது இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும், பின்னர் இவ்விவகாரம் தொடர்பாக ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
வேலூரில் கைப்பற்றப்பட்ட தொகையை கணக்கிடாமல் இதுவரை, ரூ.132 கோடி மதிப்பிலான தங்கம் 468 கிலோ, ரூ.1.7கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி 414 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.
