’யானை பசிக்கு சோளப்பொரியா?’ : மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

Published On:

| By indhu

Fund Allocation for Flood Damages - Condemned by Opposition

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தமிழகத்திற்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்று (ஏப்ரல் 27) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடியை மத்திய அரசிடம் கோரியிருந்தது.

ஆனால் அதனை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வந்த  மத்திய அரசு, தற்போது ரூ.685 கோடி மட்டுமே வழங்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடி தேசிய பேரிடர் நிவாரண வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதே போன்று டிசம்பர் மாதத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.397 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக அரசு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.38 ஆயிரம் கோடி கோரிய நிலையில் மத்திய அரசு தற்போது அனுப்பிருக்கும் தொகை குறித்து, எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் மீது தீராத வன்மம்!

அந்த வகையில், திமுக கூட்டணியில் மதுரையில் போட்டியிடும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல… வறட்சி நிவாரணம் என 3454 கோடி அறிவிப்பு.

தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனத் தெரிவித்துள்ளார்.

திமுக பேசி பெற வேண்டும்!

தொடர்ந்து, அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “வெள்ள நிவாரண நிதிக்காக தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போதும் வெள்ள நிவாரண நிதியை குறைத்துத்தான் வழங்கினார்கள்.

அதிமுக ஆட்சியில் இருந்த காலத்திலும் மத்திய அரசு கேட்ட நிதியை தரவில்லை. வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு போதிய நிவாரணத்தை மத்திய அரசிடம் இருந்து திமுக பேசி பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

யானை பசிக்கு சோளப்பொரி போல!

தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “2015ல் இருந்து கணக்கிட்டு பார்த்தால் மத்திய அரசு தமிழகத்திற்கு வேண்டிய போதுமான நிதியை ஒதுக்கவில்லை. தேசியக் கட்சிகளால் தமிழகத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.

யானை பசிக்கு சோளப்பொரி போல மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரண நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்வு சமமாகவும், சீராகவும் இருக்க வேண்டும்.

மத்தியில் உள்ள தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் எது ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்திற்கு போதுமான நிதியை தருவதில்லை” என ஜெயக்குமார் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரத்னம் : விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share