முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று (மார்ச் 22) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. full leaders list who attend delimitation meet
இந்த கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் சிங், கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும், தெலங்கானா பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் செயல் தலைவர் கேடி ராமா ராவ், பஞ்சாப்பை சேர்ந்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் செயல் தலைவர் பல்விந்தர் சிங், ஒடிசாவை சேர்ந்த பிஜு ஜனதா தளம் கட்சியின் சஞ்சய் குமார் தாஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அதேபோல், கேரளா மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் எம்.பி. கோவிந்தன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம், கேரள காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கும்பக்குடி சுதாகரன், கேரளாவின் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் பிஎம்ஏ சலாம், கேரள காங்கிரஸ் ஜோசப் கட்சியின் மாநிலத் தலைவர் பி.ஜே ஜோசப், கேரள காங்கிரஸ் மணி மாநிலத் தலைவர் ஜோஸ் கே மணி, சோசலிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.கே.பிரேமச்சந்திரன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
மேலும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் முன்னாள் எம்பி வினோத் குமார், ஒடிசா காங்கிரஸ் தலைவர் சரண் தாஸ், ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங், ஐதராபாத் எம்.பி அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் இத்தஹாதுல் முஸ்லிமின் கட்சி சார்பில் இம்தியாஸ் ஜலீல் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஆச்சரியமும்… அதிர்ச்சியும்…
ஆச்சரியம் அளிக்கும் விதமாக, முதல்வர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று பாஜக கூட்டணியில் உள்ள பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சார்பில் மக்களவை உறுப்பினர் உதய் சீனிவாஸ் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள ஆந்திராவில் ஆளும் தெலுங்கும் தேசம் கட்சி சார்பிலும், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பிலும் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.