அனைவருக்கும் ஏற்ற காலை அல்லது மாலை உணவாகச் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய ரெசிப்பி இந்த ஃப்ரூட் – வெஜ் சாட். இதில் அனைத்து ஊட்டச்சத்துகளும் கலந்து இருப்பதால், கம்ப்ளீட் டயட்டாக இருக்கும். வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளதால், கண்களுக்கும் சருமத்துக்கும் ஏற்ற உணவு. குடலைச் சுத்தம் செய்யும். ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின், தாது உப்புக்கள் நிறைந்துள்ளதால், இயற்கையாகவே உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒருமுறை மட்டும் சாப்பிடலாம்.
என்ன தேவை? Fruit and Vegetable Chaat
சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பப்பாளி, அன்னாசி, வாழைப்பழம், தக்காளி, வேகவைத்து, தோல் நீக்கிய உருளைக்கிழங்கு – தலா கால் கப்
ஆப்பிள், தோல் நீக்கிய வெள்ளரி – தலா அரை கப்
திராட்சை – சிறிதளவு
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒன்று
புதினா சட்னி, மீட்டா சட்னி (பேரீச்சம் பழம், புளி, வெல்லம் சேர்த்து அரைத்தது), எலுமிச்சைச் சாறு – தலா அரை டீஸ்பூன்
கறுப்பு உப்பு, வறுத்த சீரகத் தூள், மிளகாய்த் தூள் – தலா கால் டீஸ்பூன்
புதினா இலைகள் – மேலே தூவுவதற்காக (புதினா இலைகளை வெந்நீரில் நனைத்துப் பயன்படுத்த வேண்டும்).
எப்படிச் செய்வது? Fruit and Vegetable Chaat
பழங்கள், காய்கறிகளைப் பெரிய பாத்திரத்தில் கொட்டி, அதில் புதினா மற்றும் மீட்டா சட்னி, உப்பு, மிளகாய்த் தூள், சீரகத் தூள், எலுமிச்சைச் சாறு கலந்து வைக்கவும். மேலே புதினா இலைகளைத் தூவிவிடவும். இதைத் தயார் செய்த உடனே, சாப்பிட்டுவிட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடக் கூடாது.