ரீல்ஸிலும் ஷார்ட்ஸிலும் குழந்தைகள் வெயிட் லிஃப்ட்டிங் செய்வதையும், வொர்க் அவுட் செய்வதையும் பார்க்கிறோம். இவற்றையெல்லாம் பார்க்கும்போது குழந்தைகளுக்கும் உடற்பயிற்சிகள் அவசியமா… எந்த வயதிலிருந்து அவர்களுக்கு உடற்பயிற்சிகளை அறிமுகப்படுத்தலாம் என்கிற கேள்விகள் பலர் மனதில் எழும். ஃபிட்னெஸ் பயிற்சியாளர்கள் என்ன பதில் சொல்கிறார்கள்?
“இன்றைய சூழலில் குழந்தைகளுக்கும் உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியம். 7-8 வயதிலிருந்து குழந்தைகளை உடற்பயிற்சிகளுக்குப் பழக்குவது சரியானது.
இந்த வயதுக் குழந்தைகளுக்கு வெயிட் லிஃப்டிங் போன்ற பயிற்சிகள் தேவைப்படாது. உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கான பயிற்சிகள் பிரதானமாக கற்றுத்தரப்படும்.
உயரமான கம்பியைப் பிடித்தபடி தொங்கும் பயிற்சி, பந்தைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுந்திருக்கும் ஸ்குவாட் பயிற்சி போன்ற சின்னச் சின்ன பயிற்சிகள் கற்றுத் தரப்படும்.
நிறைய வீடியோக்களில் 2-3 வயதுக் குழந்தைகள் எல்லாம் வொர்க் அவுட் செய்வது போன்ற காட்சிகளைப் பார்த்திருக்கலாம். அவர்களுக்கு மிக மிகக் குறைவான எடையே கொடுத்து அந்தப் பயிற்சிகள் கற்றுத் தரப்படும்.
அந்தப் பயிற்சியை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்குமே தவிர, அவர்கள் எத்தனை கிலோ வெயிட் தூக்குகிறார்கள் என்பது முக்கியமாக இருக்காது.
குழந்தைகள் எளிதாகக் கற்றுக்கொண்டு விடுவார்கள். குழந்தைகளுக்கு உடல் அசைவு, இயக்கம் போன்றவை மிகச் சிறப்பாக இருக்கும். வளர, வளர நாம் சில இயக்கங்களைச் செய்யாமலே இருப்பதால்தான் பிரச்னையே வருகிறது.
சில ஜிம்களில் குழந்தைகளுக்கென்றே பிரத்யேக பிரிவு இருக்கிறது. குழந்தைகளுக்கேற்ற எடையில் டம்பிள்ஸ், பார்பெல் போன்றவை வைத்துக் கற்றுத் தருவார்கள்.
வீடியோவில் நாம் பார்க்கும் வெயிட் லிஃப்ட் செய்கிற அந்தச் சிறுமிக்கு 11-12 வயதிருக்கும். அந்தச் சிறுமி மிகச் சிறிய வயதிலிருந்தே வெயிட் லிஃப்ட்டிங் பயிற்சிகள் செய்பவர். கோச் உதவியோடு செய்கிறார்.
சமீபத்தில் 75 கிலோ டெட்லிஃப்ட் செய்த வீடியோ வைரலானது. அவரது இலக்கும் விளையாட்டுப் பின்னணியும் அதற்கேற்ப அவர் எடுக்கும் பயிற்சிகளும் வேறு.
ஒருவேளை உங்கள் குழந்தையை விளையாட்டுத்துறையில் ஈடுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான பிரத்யேக உடற்பயிற்சிகள் வேறுபடும். அந்த நிலையில் பயிற்சியாளரின் ஆலோசனையோடு அவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
T20 World Cup 2024: வெற்றி பெரும் அணிக்கு பரிசுத்தொகை இவ்வளவு கோடியா?