தமிழ்நாடு அரசின் பெண்களுக்கு மாதம் ரூ1,000 வழங்கும் திட்டம் இன்று டிசம்பர் 12 முதல் மேலும் 17 லட்சம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இன்று (டிசம்பர் 12) மாலை 3 மணியளவில் நேரு உள்விளையாட்டரங்கத்தில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் சமூக சேவகி, சமூக அநீதிகளுக்கு எதிராக போராடும் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்,
2022-ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்தாட்டத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய துளசிமதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மகளிர் உரிமைத் தொகை முதல் கட்டமாக 1,13,75,492 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
தற்போது இந்த மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்று முதல் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன் மூலம் சுமார் 17 லட்சம் பெண்கள் பயனடைய உள்ளனர்.
மேலும் தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிர் அளித்த அனுபவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டுள்ள அரசின் முன்னோடித் திட்டங்களை எடுத்துக் காட்டும் ’வெல்லும் பெண்கள்’ நிகழ்வும் இன்று நடைபெற உள்ளது.
