சுனிதா வில்லியம்ஸ்…. உலகமே அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறது. விண்வெளி வீரர்களுக்கு மட்டுமல்ல… ஒட்டுமொத்த உலகிற்கும் அடுத்த 12 மணி நேரம் திக் திக் நிமிடங்களாக உள்ளது. From space to Earth Sunita is traveling
8 நாட்கள் தங்கும் திட்டமாக கடந்த 2024 ஜூன் 5 ஆம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ். இவருடன் வீரர் புட்ச் வில்மோரும் சென்றார்.
இவர்கள் செல்வதற்காக முதலில் போயிங் நிறுவனம் ஸ்டார்லைனர் விண்கலத்தை வடிவமைத்தது. ஆனால் இதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதலில் இவர்களது பயணம் தடை செய்யப்பட்டது. புறப்படுவதற்கான கவுன்டவுன் தொடங்கி 3 நிமிடம் 50 நொடிகளில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டது.
8 நாட்கள் 9 மாதங்களாக நீடிப்பு!
அதன்பிறகு விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே இரண்டு வீரர்களும் விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
ஜூன் 5ஆம் தேதி இரவு 8.22 மணிக்கு புறப்பட்ட இவர்கள், 25 மணி நேர பயணத்திற்கு பிறகு ஜூன் 6 ஆம் தேதி இரவு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். துள்ளல் நடனத்துடன் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்துக்கு சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
விண்வெளி மையத்தில் 8 நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளும் சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. . ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல பிரச்னைகளைச் சந்தித்தது. விண்கலத்தை வழிநடத்தும் அதன் ஐந்து உந்துவிசை அமைப்புகள் செயலிழந்தன. அதில் இருந்த ஹீலியமும் தீர்ந்து போனது. இதனால் சுனிதா வில்லியம் பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
9 மாதங்களாக விண்வெளியிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. அதாவது 288 நாட்கள்… இந்த காலக்கட்டத்தில் அவர்கள், நிலவு மற்றும் செவ்வாய் கோளில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்கான திட்டங்களுக்கு தேவையானவற்றை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விண்வெளி நிலையத்தில் செடிகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஒருபக்கம் அவர்கள் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்னொரு பக்கம் அவர்களை பூமிக்கு அழைத்து வர தீவிர முயற்சி மேற்கொண்டது நாசா.
இந்த சமயத்தில் அமெரிக்காவில் ஆட்சி அதிகாரம் மாறியது. டொனால்டு டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றதும், சுனிதா, புட்ச் வில்மோர் இருவரும் பூமி திரும்ப முடியாததற்கு ஜோ பைடனின் மோசமான ஆட்சி நிர்வாகமே காரணம் என குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தநிலையில் வீரர்கள் இருவரையும் மீட்பதற்காக டிரம்பின் நண்பரான எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டது.
புறப்பட்ட சுனிதா
அந்த நிறுவனத்தின் ‘பால்கன் — 9’ ராக்கெட் உடன், ‘டிராகன்’ விண்கலம் ஃப்ளோரிடாவின் கேப் கானவெரலில் இருந்து சனிக்கிழமை(மார்ச் 15) பிற்பகல் 1 மணிக்குப் புறப்பட்டது. ஞாயிறு மாலை(மார்ச் 16) 5.30 மணியளவில் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது.
அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆனி மேக்லைன், நிக்கோலி, ஜப்பான் விண்வெளி வீரர் டகுயா ஒனிசி, ரஷ்ய வீரர் கிறிஸ் பெஸ்கோ ஆகியோரும் சென்றனர். அவர்களை சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இந்தநிலையில், சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் இந்திய நேரப்படி இன்று காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டனர். அவர்களுடன் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் வருகின்றனர்.
இந்த பயணம் தொடங்குவதற்கு முன்னதாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்களுடன் பணிபுரிந்த மற்ற வீரர்களுக்கு விடை கொடுத்து, டிராகன் விண்கலத்தில் வீரர்கள் ஏறுவதும் , தங்கள் பொருட்களுடன் இருக்கைகளில் அமர்வதற்கு தயாராகும் வீடியோவை நாசா வெளியிட்டது.
4 பேரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து தயாரானதும் விண்கலம், விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கியது. ஏறத்தாழ 20 மணி நேரம் பயணித்து இந்த விண்கலம் பூமியை அடையவுள்ளது. நாளை (மார்ச் 19 ) அதிகாலை 3.27 மணிக்கு பூமியை வந்தடையும் என்று நாசா கூறுகிறது.
எப்படி தரையிறங்கும்?
பூமிக்குத் திரும்பும் போது அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 28,200 கிமீ வேகத்தில் டிராகன் விண்கலத்தால் பயணிக்க முடியும். முதலில் சுனிதா உள்ளிட்ட வீரர்களை சுமந்து வரும் டிராகன் அதிவேகமாக பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும். அந்த சமயத்தில் இந்த விண்கலம் 1600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்க வேண்டியிருக்கும்.
அப்போது விண்கலத்தில் உள்ளே இருக்கும் வீரர்களை, அவர்களிடம் இருக்கும் பாதுகாப்பு கவசம் காக்கும். புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த புறகு, விண்கலம் தானாகவே தனது வேகத்தை இழந்துவிடும் என்று கூறப்படுகிறது. அப்போது புவி ஈர்ப்பு விசையைக் காட்டிலும் கூடுதலாக 4 மடங்கு ஈர்ப்பு விசையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இறுதியாக 4 பாராசூட்டுகள் விரிவடையும். அப்போது விண்கலத்தில் இருக்கும் வீரர்கள் அதிர்வுகளை உணர்வார்கள். இந்த சமயத்தில்தான் விண்கலம் தனது வேகத்தை மேலும் குறைத்து பாதுகாப்பாக கடலில் இறங்க வழிவகுக்கும். இந்த நேரத்திற்காகத்தான் உலகமே எதிர்நோக்கியுள்ளது.
இதுவரை விண்வெளியில் அதிக நேரம் தங்கியிருந்த வீரர்கள் யார் யார்?
பெக்கி விட்சன் – 675 நாட்கள்
ஜெஃப் வில்லியம்ஸ் – 534
மார்க் வந்தே ஹெய் – 523
ஸ்காட் கெல்லி – 520
மைக் பாரட் – 447
ஷேன் கிம்ப்ரோ- 388
மைக் ஃபின்கே – 382 ஆகிய நாசா வீரர்கள் அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய ரெக்கார்டு ஹோல்டர்களாக உள்ளனர். From space to Earth Sunita is traveling