மார்ச் 22ஆம் தேதியான நேற்று நாடு முழுவதும் உச்ச நீதிமன்றம் தொடங்கி பல்வேறு நீதிமன்றங்கள் அரசியல்வாதிகள் மீதான முக்கிய வழக்குகளை விசாரித்திருக்கின்றன.
அமைச்சர் பொன்முடி தொடங்கி பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா என பல முக்கிய அரசியல்வாதிகளின் வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரித்திருக்கின்றன.
மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல்வாதிகளின் வழக்குகள் இப்படி அதிகளவு விசாரிக்கப்படுவது கவனிக்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த வழக்குகளில் சிலருக்கு நிவாரணம் கிடைத்தாலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற முக்கிய நபர்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை.
இந்திய ஜனநாயக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது பதவியில் இருக்கும் முதலமைச்சருக்கு நிவாரணம் மறுக்கப்பட்ட நாளாகவும் இது பார்க்கப்படுகிறது.
நேற்று நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் வழக்குகள்
அமைச்சர் பொன்முடி விவகாரம்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட பின்னரும், பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்காத தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் மார்ச் 21ஆம் தேதி கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது.
அதைதொடர்ந்து பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதாக கூறி ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 22) பதில் அளிக்கப்பட்டது. இதற்கு மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் நீதிபதிகளிடம், “உங்களை போன்றவர்களால் தான் ஜனநாயகம் நிலைத்து நிற்கிறது” என கூறினார்.
தொடர்ந்து நேற்று மாலை 3.30 மணிக்கு பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்.
கெஜ்ரிவால் வழக்கு!
மிக முக்கியமான வழக்கு ஒன்று நேற்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அப்போது அமலாக்கத் துறை கெஜ்ரிவாலை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டது, ஆனால், 10 நாள் அவகாசம் தர மறுத்தாலும் அமலாக்கத் துறை கோரிக்கையை ஏற்ற நீதிபதி காவேரி பவேஜா, வரும் மார்ச் 28 வரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
இதற்கிடையே டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் கோரியிருந்தார் கெஜ்ரிவால், ஆனால் இடைக்கால பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதற்கிடையே கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார், ஆனால் இறுதியில் அந்த மனுவையும் நேற்று கெஜ்ரிவால் திரும்பப் பெற்றார்.
கவிதா வழக்கு
டெல்லி கலால் கொள்கை வழக்கில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் பிஆர்எஸ் கட்சியின் எம்எல்சி கவிதா கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு மார்ச் 26ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவர் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. விசாரணை நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியது.
காங்கிரஸ் வழக்கு!
கடந்த 2014-15, 2015-16 மற்றும் 2016-17 ஆகிய மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் வருமான வரியை வருமான வரித் துறை மறுமதிப்பீடு செய்வதை எதிர்த்து அக்கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வருமான வரித்துறை நடவடிக்கையின் காரணமாக காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வரும் மக்களவைத் தேர்தலுக்கு செலவு செய்ய முடியாத வகையில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வருமான வரித்துறை தரப்பில், “ரூ.520 கோடிக்கு மேல் காங்கிரஸ் கணக்கில் வருமானம் வரவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மத்திய இணையமைச்சருக்கு எதிரான வழக்கு
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பிடிப்பட்ட நபரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சரும் பாஜக தலைவருமான ஷோபா கரந்த்லாஜே பேசியிருந்தார்.
அவருக்கு எதிராக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதுரை சைபர் கிரைம் போலீசார், மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி அவர் பேசியிருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளித்தார்.
இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பெங்களூரு மாவட்ட தேர்தல் அதிகாரி எப்ஐஆர் பதிவு செய்தார்.
இந்தசூழலில் தன் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரை ரத்து செய்ய கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஷோபா கரந்த்லாஜே மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஷோபா கரந்த்லாஜேவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
தேஜஸ்வி சூர்யா வழக்கு!
பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தலைவரான பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி தேஜஸ்வி சூர்யா, சிறுபான்மையினரை குறிவைத்து பகையை பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தேர்தல் ஆணையம் புகார் அளித்தது.
இந்த புகாரின் பேரில் ஹலசுரு கேட் காவல் நிலையத்தில் தேஜஸ்வி சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து தேஜஸ்வி சூர்யா சார்பில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் தீக்சித், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
2ஜி-சிபிஐ மனு
2ஜி அலைக்கற்றை முறைகேடு புகாரில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவும் நேற்று விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
இப்படி நேற்று அரசியல் வாதிகளுக்கு எதிரான வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரித்திருக்கின்றன.
பல்வேறு நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் நடந்தாலும், தேர்தல் நெருங்கும் வேளையில், ஒரே நாளில் அரசியல்வாதிகளுக்கு எதிரான இத்தனை வழக்குகள் விசாரிக்கப்படுவது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
குறிப்பாக இந்த வழக்குகளில் பெரும்பாலும் ஆளுநர், அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகள் அரசியல்வாதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிரானவை என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்கள் நன்றி – பார் அண்ட் பென்ச்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தென்சென்னையில் போட்டி: தமிழிசைக்கு மோடி சொன்ன மெசேஜ்!
Thug Life: படத்தில் இருந்து… மீண்டும் ஒரு முன்னணி நடிகர் விலகல்?
