வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டியுள்ளனர்.
இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் இன்று (ஜனவரி 3) கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “துணிச்சல் மிக்க ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்வோம். காலனித்துவ ஆட்சிக்கு எதிராக ஒரு வீரப் போராட்டத்தை நடத்தினார், இணையற்ற வீரம், புத்திசாலித்தனத்துடன் ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்கவும், சுதந்திரத்திற்காகப் போராடவும் அடுத்தடுத்த தலைமுறைகளைத் தூண்டினார். பெண்களை மேம்படுத்துவதில் அவரது பங்கு பரவலாகப் பாராட்டை பெற்றது.
தமிழ்நாடு ஆளுநர் ரவி

வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்தநாளில் அவருக்கு தேசம் மரியாதை செலுத்துகிறது. அடக்குமுறை பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக உறுதியுடன் போராடியது, தேசிய சுதந்திரத்துக்கான முதலாவது போராட்டத்தை தூண்டியது. அவரது நீடித்த மரபு, தேசத்தைக் கட்டியெழுப்ப நடந்து வரும் பயணத்தில் சுதந்திரம் மற்றும் நீதிசார் லட்சியங்களை நிலைநிறுத்த பல தலைமுறைகளுக்கும் வழிகாட்டியாக விளங்கி தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
முதல்வர் ஸ்டாலின்

ஆதிக்கத்துக்கு அடிபணியும் பேச்சுக்கே இடமில்லை எனத் தாய்நாட்டின் விடுதலைக்காக வெகுண்டெழுந்த தீரச்சுடர் வீரமங்கை வேலுநாச்சியார் புகழ் வாழ்க!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போர்க்களம் கண்ட முதல் பெண் அரசி, வீரத்தின் அடையாளமாகக் காலம் உள்ளவரை மங்காப்புகழுடன் திகழும் வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாளில், அவர்தம் தீரத்தையும் பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயர்களை போரில் வீழ்த்தி முடிசூடிய ஒரே ராணியும், சிவகங்கைச் சீமையின் அரசியுமான வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்ததினம் இன்று.
போர்க்களத்தில் வீழ்த்த முடியாத வீராங்கனையாகவும், நாட்டு மக்கள் நலனில் அதீத அக்கறை கொண்டிருந்த ஆட்சியாளராகவும் திகழ்ந்த வேலுநாச்சியாரின் வீரம் செறிந்த வரலாற்றை எந்நாளும் நினைவில் கொள்வோம்.
தவெக தலைவர் விஜய்

ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
டிஜிட்டல் திண்ணை: அமித்ஷா – எடப்பாடி… ஆரம்பமானது ரகசிய பேச்சு!
எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை… உறுதி செய்த உயர்நீதிமன்றம்!