தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஐந்தாவது முறையாக இன்று (மார்ச் 14) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. From maize to sugarcane farmers
இதில் தென்னை, மலர், மக்காசோளம், கரும்பு, பருத்தி விவசாயிகளுக்கு என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்.
பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் From maize to sugarcane farmers
“2025-26ஆம் ஆண்டில் சுமார் 63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில், குறுதானிய சாகுபடி, இடுபொருள்கள் விநியோகம், காய்கறிப்பயிர்களில் பரப்பு விரிவாக்கம், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டுதல், நுண்ணீர்ப்பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம் போன்றவற்றிற்கு மானியம் வழங்கிட 22 கோடியே 80 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மலைவாழ் உழவர் முன்னேற்றத்திட்டம் செயல்படுத்தப்படும். திருவண்ணாமலை, நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், திருப்பத்தூர், திருநெல்வேலி, வேலூர், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், கோயம்புத்தூர் ஆகிய 20 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் பசுந்தாள் உரவிதைகள் விநியோகம், மண்வள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த பண்ணையம், வேளாண்காடுகள் உருவாக்குதல், பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம் போன்ற 15 திட்டக்கூறுகளுடன் 142 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 2025-26ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் ஒரு லட்சத்து 87 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 79 ஆயிரம் உழவர்கள் பயனடையும் வகையில், 40 கோடியே 27 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடையும் வகையில், நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய பயிர்களின் பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு, எண்ணெய்வித்துகள் இயக்கம், 2025-26 ஆம் ஆண்டில் இரண்டு லட்சத்து 16 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சுமார் 90 ஆயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் 108 கோடியே 6 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
52 கோடியே 44 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீட்டில், 2025-26 ஆம் ஆண்டிலும் சிறுதானிய இயக்க திட்டம் செயல்படுத்தப்படும்.
இயற்கை வேளாண்மையைப் பரவலாக்கம் செய்திடும் விதமாக பல்வேறு செயல்பாடுகள் தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் மொத்தம் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும்.
ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமைக்குடில்கள், நிழல்வலைக் குடில்கள் அமைத்தல், சூரியசக்தி உலர்த்திகள், சூரியசக்தி பம்பு செட்டுகள் வழங்குதல், மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள், பண்ணை இயந்திரங்கள் வழங்குதல் போன்ற உயர் மதிப்புத் திட்டங்களில், ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு உழவர்களுக்கு அவர்களின் பங்குத்தொகையினால் ஏற்படும் பொருளாதாரச் சுமையினைக் குறைத்து உதவிடும் வகையில், நடைமுறையில் உள்ள 40 முதல் 50 சதவீத மானியத்திற்குப் பதிலாக 60 முதல் 70 சதவீத மானியம் வழங்கப்படும். இக்கூடுதல் மானியம், மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும். இதற்காக, 2025 – 26 ஆம் ஆண்டில் 21 கோடி ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2025–2026ஆம் ஆண்டில் அரசு விதைப் பண்ணைகள் மற்றும் உழவர்களின் நிலங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து, விதைகள் கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்திற்கு 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், உழவர்களுக்குத் தரமான சான்று விதைகளைக் காலத்தே வழங்கிட ஏழு அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள், 15 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதியதாக நிறுவப்படும்.
தமிழ்நாட்டில் பருத்தியின் தேவை அதிகரித்துள்ளதால், பருத்தி உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க, பருத்தி சாகுபடித் திட்டம் 2021-2022ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-2026 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் 12 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவில், டன் ஒன்றுக்கு 349 ரூபாய், சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் கரும்புக்கு, டன் ஒன்றிற்கு 3,500 ரூபாய் வழங்கப்படும். இதனால் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கரும்பு உழவர்கள் பயன்பெறுவர். இதற்கென, 297 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஊட்டச்சத்துகளை அளிப்பதில் காய்கறிகள், பழங்கள், பயறுவகைகள், சிறுதானியங்கள் பெரும்பங்காற்றுகின்றன. ஊட்டச்சத்து வழங்கும் இந்த விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் ”ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்னும் புதிய திட்டம் தமிழ்நாட்டில் 2025-2026ஆம் ஆண்டில் 125 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
பழச்செடித் தொகுப்புகள் ஒன்பது லட்சம் குடும்பங்களுக்கு, 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
காய்கறிப்பயிர்கள் 14 ஆயிரம் ஏக்கரில் பரப்பு விரிவாக்கம் செய்யப்படும்.
பழங்களின் சாகுபடிப் பரப்பானது 12 ஆயிரம் ஏக்கரில் ஊக்குவிக்கப்படும்.
பயறு பெருக்குத் திட்டம் 5 லட்சத்து 72 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 2 லட்சத்து 50 ஆயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும்.
துவரை சாகுபடிப் பரப்பு குறைந்து வரும் மாவட்டங்களில், 80 ஆயிரம் ஏக்கர் பரப்பில், துவரையைத் தனிப்பயிராகவோ, வரப்புப் பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ பயிரிடுவது ஊக்குவிக்கப்படும்.
புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, காராமணி உள்ளிட்ட பயறுவகைகளை இல்லம்தோறும் வளர்க்கும் பொருட்டு பயறுவகை விதைகள் அடங்கிய தொகுப்பு ஒரு லட்சம் இல்லங்களுக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
4,000 நடமாடும் விற்பனை வண்டிகளுக்கு மானியம் வழங்கப்படும்.
தென்னை சாகுபடியை ஊக்குவிக்க உழவர்கள் விருப்பத்தின்படி நெட்டை, நெட்டை X குட்டை, குட்டை X நெட்டை ஒட்டு இரகக் கன்றுகள் வழங்கப்படும். இத்திட்டத்தினை அனைத்து மாவட்டங்களிலும் ஒன்பதாயிரத்து 800 ஏக்கரில் செயல்படுத்த நான்கு கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தென்னந்தோப்புகளில் அடுக்குமுறை சாகுபடியில் வாழை, ஜாதிக்காய், மிளகு போன்ற பலவகையான பயிர்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்து ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக வருவாய் ஈட்டும் வகையில் உழவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். இத்திட்டம் எட்டாயிரம் ஏக்கரில், மூன்று கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித்திட்டம் மொத்தம் 35 கோடியே 26 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
கோடைக்காலத்தில், குறைந்த நீர்த்தேவையுள்ள, குறுகிய காலப் பயறுவகைகள் 71,600 ஏக்கரிலும், எண்ணெய்வித்துகளான நிலக்கடலை 74 ஆயிரம் ஏக்கரிலும், எள் 33 ஆயிரத்து 300 ஏக்கரிலும், தக்காளி, வெண்டை, வெங்காயம், கத்தரி, மிளகாய், கீரைகள் போன்ற முக்கிய காய்கறிப்பயிர்கள் 57 ஆயிரத்து 300 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும். இதனால் உழவர்களுக்கு உரிய விலை கிடைப்பதுடன், நுகர்வோருக்கு நியாயமான விலையில் காய்கறிகள் கிடைக்கும். இதற்கென, 10 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2025-2026ஆம் ஆண்டில் மூன்று லட்சம் ஏக்கரில், ஆயிரத்து 168 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் நுண்ணீப்பாசன அமைப்புகள் நிறுவப்படும்.

மணப்பாறைக் கத்தரி, சில்லுக்கொடி கத்தரி, குலசை கத்தரி, பெரிய கொல்லம்பட்டிக் கத்தரி, தருவைத் தக்காளி, மஞ்சள் குடம் தக்காளி, ஆனைக்கொம்பன் வெண்டை, சிவப்பு வெண்டை, சிறகு அவரை, மூக்குத்தி அவரை போன்ற பல்வேறு வகையான பாரம்பரிய காய்கறி இரகங்களைச் சாகுபடி செய்வதை ஊக்குவிக்க இரண்டு கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 2,500 ஏக்கரில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் 7,000 உழவர்கள் பயனடைவார்கள்.
வெங்காய சேமிப்புக்கூடங்கள் அமைக்க மானியம் வழங்க, 18 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மலர்கள் சாகுபடி செய்யும் உழவர்களுக்கு மானியம் வழங்க எட்டு கோடியே 51 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2025-2026ஆம் ஆண்டில் 3,000 ஏக்கரில், ஒரு கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் ஏழாயிரம் உழவர்கள் பயன்பெறும் வகையில் மல்லிகை சாகுபடி ஊக்குவிக்கப்படும்.

மிளகு, கொத்தமல்லி, மிளகாய், ஜாதிக்காய், கிராம்பு, பட்டை, பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற சுவைதாளிதப் பயிர்களின் சாகுபடியும், இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில், 2,500 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி, மிளகாய் சாகுபடி செய்வதும் ஊக்குவிக்கப்படும். இதற்கென 11 கோடியே 74 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 17,500 ஏக்கரில் சுவைதாளிதப் பயிர்கள் சாகுபடி செய்யும் 23 ஆயிரம் உழவர்கள் பயன்பெறுவார்கள்.
முந்திரியின் பரப்பினை உயர்த்தி, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரி சார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், தமிழ்நாடு முந்திரி வாரியம் (Tamil Nadu Cashew Board) ஏற்படுத்தப்படும்.
பனை சாகுபடியை ஊக்குவிக்க 10 லட்சம் பனை விதைகள், பனை மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்கும் கூடங்கள், மதிப்புக்கூட்டுதல் பயிற்சி ஆகிய இனங்களுக்கு, பனை மேம்பாட்டு இயக்கத்தில் ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 20 ஆயிரம் நபர்கள் பயனடைவார்கள்.
புதிய இரக பலா சாகுபடி பரவலாக்கம், பலாவில் ஊடுபயிர் சாகுபடி போன்ற திட்டகூறுகள் ஊக்குவிக்கப்படும். இதற்கென 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப்பகுதிகளிலும், கல்லணை கால்வாய்ப்பாசனப் பகுதிகளிலும் உள்ள “சி” மற்றும் “டி” பிரிவு வாய்க்கால்களில் 2,925 கிலோ மீட்டர் நீளத்திற்கு 13 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு “ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்” நிலை ஏற்படுத்தப்படும்.
பசுமைக் காய்கறிகளை நுகர்வோர் தங்கள் இல்லத்திலேயே நேரடியாக பெற்றுக்கொள்ள ஏதுவாக, மாவட்டத் தலைமையிடங்களுக்கு அருகிலுள்ள உழவர் சந்தைகள் உள்ளூர் இணைய வர்த்தகத் தளத்துடன் (Local Online Sale Platform) இணைக்கப்படும்.
2025-26ஆம் ஆண்டில் நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய ஐந்து வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. From maize to sugarcane farmers