மதுரையில் தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் இன்று (செப்டம்பர் 12) காலை ஃபிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து விடுதி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் விசாகா மகளிர் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலையில் திடீரென ஒரு அறையில் இருந்த பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அறையில் இருந்த ஆடைகள் எரிந்து பிற அறைகளுக்கும் தீ பரவியது.
மற்ற அறையில்இருந்தவர்கள் அலறி அடித்து வெளியேறிய நிலையில், வாடிப்பட்டியில் தனியார் பள்ளியில் பணிபுரிந்த பரிமளாசுந்தரி (50), மற்றொரு ஆசிரியை சரண்யா (22) என இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து திருநகர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகையில் சிக்கி மூச்சுதிணறல் ஏற்பட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இதுகுறித்து திருநகர் போலீஸார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட விடுதி அமைந்துள்ள கட்டிடம் மிகவும் பழமையானது, பயன்படுத்த உகந்தது அல்ல என்று கூறி கட்டிடத்தை இடிக்குமாறு மதுரை மாநகராட்சி கடந்த ஓராண்டுக்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், நோட்டீஸ் அனுப்பியும் கூட அந்தக் கட்டிடம் இயங்கி வந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து தங்கும் விடுதியின் உரிமையாளரான இன்பா என்ற பெண்மணியை திருநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் மதுரை நகரில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விடுதியில் இருந்த பெண்கள் தற்காலிகமாக தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விடுதி தீ விபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரால் இந்தியாவுக்கு இவ்வளவு கோடி லாபமா?
”ஒவ்வொரு நடிகர்களும் ஒருவிதம்” : பட்டியல் போடும் நடிகை அம்பிகா