மீன்பிடி தடைக்காலம் – நன்னீர் இறால் விற்பனை களைகட்டியது!

Published On:

| By admin

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் கடந்த மாதம் 15ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு உள்ளது. ஆழ்கடலுக்கு விசைப்படகு மீனவர்கள் செல்லாததால் மார்க்கெட்டுகளில் பெரிய மீன்கள் வரத்து இல்லை. மேலும் கடல் மீன்கள் விற்பனைக்கு அதிகம் வராததால் மீன் பிரியர்கள் அதிக அளவில் ஏரி, குளங்களில் உள்ள பெரிய மீன்களை வாங்கி செல்கின்றனர். இதனால் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் ஏரி, குளம் மீன்கள் விற்பனை களைகட்டியது.

மீஞ்சூரை அடுத்த சீமாபுரம் கொசஸ்தலை ஆற்றின் அணைக்கட்டில் தற்போது அரிதாக காணப்படும் நீண்ட கொடுக்குடன் உள்ள நன்னீர் இறால் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனை மீனவர்கள் நீரில் மூழ்கி கையால் பிடித்து மீஞ்சூர், பொன்னேரி பகுதியில் அதிக அளவில் விற்பனை செய்தனர். இது ஒரு கிலோ 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதுவரை கண்டிராத பெரிய வகை நன்னீர் இறால் விற்கப்படுவதால் இதனை பொதுமக்கள் கூட்டமாக கூடி பார்த்து செல்கின்றனர். மேலும் போட்டி போட்டு வாங்கி சென்றார்கள்.

ADVERTISEMENT

இந்த நன்னீர் இறால் குறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலனிடம் பேசுகையில், “இது நன்னீரில் வாழக்கூடிய இறால் வகை ஆகும். கால் கிலோ முதல் முக்கால் கிலோ வரை வளரும். இதன் கொடுக்கு அதிக நீளத்துடன் காணப்படும். காவிரி கோதாவரி, கிருஷ்ணா பகுதியில் அதிகமாக இவை இருக்கும். தற்போது கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் அரிதாகக் காணப்படுகின்றன. கடல் இறாலை விட அதிக சுவையுடன் இது இருக்கும். இந்த வகை இறால் குஞ்சுகளை சேகரித்து பண்ணைகள் அமைத்து மீண்டும் உற்பத்தி செய்வதற்கான வழிவகை செய்யப்படும்.” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share