இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் சமீபகாலமாக “கிரன்ச்” (Crunch) சத்தத்துடன் பழங்களைச் சாப்பிடும் வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள். பச்சைப் பழம் எப்படி பிஸ்கட் போல உடைகிறது? ஐஸ் க்ரீம் எப்படி உருகாமல் கட்டியாக இருக்கிறது? இந்த மாயாஜாலத்திற்குப் பெயர்தான் ‘ஃப்ரீஸ் டிரையிங்’ (Freeze Drying).
நாசா (NASA) விண்வெளி வீரர்களுக்கு உணவு கொடுப்பதற்காகப் பயன்படுத்திய இந்தத் தொழில்நுட்பம், இன்று நம் வீட்டு ஸ்நாக்ஸ் பாக்ஸ் வரை வந்துவிட்டது.
என்ன இது ‘ஃப்ரீஸ் டிரையிங்’?
சாதாரணமாக நாம் உணவை வெயிலில் காய வைப்போம் (Dehydration). அதில் நீர்ச்சத்துடன் சேர்த்துச் சுவையும், சத்தும் போய்விடும். ஆனால், ‘ஃப்ரீஸ் டிரையிங்’ என்பது ‘உறை உலர்த்தல்’ முறை.
முதலில் உணவு மைனஸ் 40 டிகிரிக்கும் கீழே உறைய வைக்கப்படும்.
பிறகு ஒரு வெற்றிடத்தில் (Vacuum) வைக்கப்படும்போது, உணவில் உள்ள பனிக்கட்டி (Ice), நீராக மாறாமல் நேரடியாக ஆவியாக (Vapor) மாறி வெளியேறிவிடும். இதற்குப் பெயர் ‘ப பதங்கமாதல்’ (Sublimation).
கடைசியில் கிடைப்பது, நீர்ச்சத்தே இல்லாத, ஆனால் வடிவம் மாறாத உணவு!
ஏன் இதற்கு இவ்வளவு மவுசு?
சத்துக்கள் அப்படியே இருக்கும்: சாதாரண டிரையிங் முறையில் 60% சத்துக்கள் அழிந்துவிடும். ஆனால், இதில் 97% சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அப்படியே இருக்கும்.
சுவை மாறாது: ஃப்ரெஷ் பழத்தின் அதே சுவை இருக்கும். ஆனால், டெக்ஸ்சர் (Texture) மட்டும் பஞ்சு மிட்டாய் போல அல்லது பிஸ்கட் போல மொறுமொறுப்பாக இருக்கும்.
ஆயுட்காலம் (Shelf Life): பிரிட்ஜில் வைக்காமலே, காற்று புகாத டப்பாவில் அடைத்தால் 25 வருடங்கள் வரை கெட்டுப்போகாது!
வைரலாகும் ‘ஃப்ரீஸ் ட்ரைடு கேண்டி’:
இப்போது இணையத்தில் மிகப்பெரிய டிரெண்ட், ‘ஃப்ரீஸ் ட்ரைடு கேண்டி’ (Freeze Dried Candy). ஸ்கிட்டல்ஸ் (Skittles) போன்ற மிட்டாய்களை இந்த முறையில் மாற்றும்போது, அவை பலூன் போல உப்பி, கடித்தால் கரமுரா என்று உடையும். இது குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்துள்ளதால், பல சிறுதொழில் முனைவோர்கள் (Startups) இதில் இறங்கியுள்ளனர்.
எதிர்காலம்:
போர்ச் சூழல் அல்லது பேரிடர் காலங்களில் உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க இதுவே சிறந்த வழி. விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
தண்ணீரை உறிஞ்சிவிட்டு, சுவையை மட்டும் மிச்சம் வைக்கும் இந்தத் தொழில்நுட்பம், உணவுத்துறையின் எதிர்காலத்தையே மாற்றி வருகிறது. இனி “பழம் அழுகிப்போச்சு” என்ற கவலையே இருக்காது!
