Freedom of RSS prisoners along with Muslim prisoners
குற்ற வழக்கில் தண்டனை பெற்று 20, 25 வருடங்களுக்கு மேலாக சிறையிலிருந்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். திமுகவின் கூட்டணிக் கட்சியான மமக இது தொடர்பாக அவ்வப்போது போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில் பிப்ரவரி 3 அண்ணா நினைவுநாளை முன்னிட்டு, தற்போது தமிழக ஆளுநர் ஒப்புதலுடன் இஸ்லாமியர்கள் ஐந்து பேர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 2 பேர் உட்பட 12 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.
ஏற்கனவே கடந்த ஆண்டு இதற்கான முயற்சி நடந்தபோது ஆளுநர் மத அடிப்படையிலான வழக்குகளில் சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட, ஒப்புதல் அளிக்கவில்லை. இப்போது இஸ்லாமிய சிறைவாசிகளுடன், ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த கைதிகளும் சேர்த்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
1998 ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஆண், பெண், குழந்தைகள் என்று சுமார் 46 பேர் கொல்லப்பட்டனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துகு முன்பு நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய அபுதாஹிர், ஹாரூன் பாஷா, ஷாகுல் ஹமீது, குண்டு ஜாகீர், ஊமை பாபு ஆகியோர் தண்டனை பெற்று சிறையில் 24 வருடத்திற்கு மேலாக இருந்து வருகின்றனர்.
குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு அமீர் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் ஆர். எஸ். எஸ். சார்ந்த பூரிகமல் மற்றும் விஜயன் இருவரும் தண்டனை பெற்று சிறையில் இருந்து வந்தனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு கோரிக்கைகள் சென்றிருக்கின்றன.
இந்த பின்னணியில் ஆர். எஸ். எஸ். சை சேர்ந்த பூரிகமல், விஜயன் இருவர் மற்றும் இஸ்லாமியர்கள் ஐந்து பேர் உட்பட 12 கைதிகளை விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் கொடுத்தார். இதன் பின் தமிழ்நாடு அரசும் ஆணையிட்டது.
இதன்படி பிப்ரவரி 5 ஆம் தேதி சென்னை புழல் சிறையிலிருந்த குண்டு ஜாகீர், கோவை சிறையிலிருந்த ஊமை பாபு, ஷாகுல் ஹமீது, ஹாரூன் பாஷா, பூரிகமல், விஸ்வநாதன் என்ற விஜயன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர், இன்று கோவை சிறையில் இருந்து அபுதாஹிர் என்ற அபு விடுதலையாகிறார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம்,
”எங்களைப் போன்ற பொதுநல அமைப்பினர் மற்றும் கட்சியினர் கட்சி, மதம், சாதி, பார்க்காமல் தண்டனை காலம் முடிந்து 20 வருடத்திற்கு மேலாக சிறையில் அடைப்பட்டிருக்கும் 37 கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தோம். அதில் இந்திய தேசிய லீக் கட்சி, பாமக, விசிக, மமக, தவாக, மதிமுக போன்ற கட்சிகளும் அமைப்புகளும் போராடினோம். கடந்த ஆட்சியிலும் மனு கொடுத்தோம். இந்த ஆட்சியிலும் மனு கொடுத்தோம். பெரும் போராட்டத்திற்கு பிறகு ஐந்து இஸ்லாமியர்களை விடுதலை செய்துள்ளனர்.
பொதுநலத்தில் சுயநலன் என்பதுபோல் இரு ஆர்.எஸ்.எஸ். காரர்களையும் சேர்த்து விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ளார். ஆர். எஸ். எஸ்.சை சேர்ந்த பூரிகமல், விஜயன் இருவரையும் விடுதலை செய்ய திட்டமிட்டவர்கள் அதை நிறைவேற்றிவிட்டார்கள்” என்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வணங்காமுடி
‘கிராமி’ இசையமைப்பாளரின் ‘சூப்பர்ஹிட்’ சினிமா பாடல்கள்!
சென்னை திரும்பும் முதல்வர்: குவியும் திமுக நிர்வாகிகள்!
Freedom of RSS prisoners along with Muslim prisoners